பிரபல மொபைல் சாதனங்கள் தயாரிப்பாளரான ஹூவாய் நிறுவனம் அதன் முதல் மின்சார காரை காட்சிப்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வாகனக் கண்காட்சியில் இந்தக் கார் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
செரெஸ் ஹுவாய் ஸ்மார்ட் செலக்சன் எஸ்எஃப்5 எனும் பெயரில் இந்த மின்சாரக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் விற்பனையும் துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சீனாவில் மட்டும் இந்தக்கார் விற்பனைக்குக் கிடைக்கும் என அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹூவாய் எஸ்எஃப்5 எலெக்ட்ரிக் கார் 4.7 மீட்டர் நீளம், 1.93 மீட்டர் அகலம் மற்றும் 1.625 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. இதன் வீல் பேஸ் 2.875 மீட்டர்.
உட்புறத்தில் முன்பகுதியில் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று சென்டர் கன்சோலிலும், மற்றொன்று ஸ்டியரிங் வீலிற்கு பின்னாலும் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், வாய்ஸ் கன்ட்ரோல் வசதியும் தரப்பட்டுள்ளது.
ஹூவாய் எஸ்எஃப்5 மின்சார காரானது 405 kW (550 பிஎஸ் பவர்) மற்றும் 820 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என்றும், ஃபுல் சார்ஜில் 1,000 கிமீ வரை பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார கார் 100கிமீ வேகத்தை வெறும் 4.86 நொடிகளிலேயே எட்டமுடியும். இத்துடன், கேம்ப் செய்யும் வசதி, இன்டக்சன் ஹாப்கள், ஸ்டீரியோக்கள் மற்றும் பிற பயணத்திற்கு தேவையான கருவிகளும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.
ரேடார் மற்றும் அல்ட்ராசோனிக் சென்சார்கள், டிரைவர் அசிஸ்ட் வசதி, கொல்லிஷன் வார்னிங், தானியங்கி பிரேக்கிங் வசதி மற்றும் லேன் டிபார்சர் வார்னிங் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என ஏராளமான அம்சங்கள் இக்காரில் இடம் பெற்றுள்ளன.
மேலும், ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பதைப் போன்று வசதியான இருக்கை முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹூவாய் எஸ்எஃப்5 எலெக்ட்ரிக் கார் டீப் சீ ப்ளூ, சார்கோல் பிளாக், பியர்ல் ஒயிட் மற்றும் டைட்டானியம் சில்வர் கிரே ஆகிய நான்கு நிறங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.