புது தில்லி, மே 12
நடப்பு 2020-21வது சந்தைப் பருவத்தில் இதுவரையில் 56 லட்சம் டன் சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவற்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக அகில இந்திய சர்க்கரை வர்த்தக கூட்டமைப்பு (ஏஐஎஸ்டிஏ) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஏஐஎஸ்டிஏ கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:
நடப்பு 2020-21வது (அக்டோபர்-செப்டம்பர்) சந்தைப் பருவத்தில் உபரியாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரையை கட்டாயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த ஏற்றுமதி கொள்கையின்படி, இதுவரையில் 56 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன. கூடிய விரையில் எஞ்சியுள்ள 4 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கும் ஒப்பந்தங்கள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி ஒப்பந்தம் பெறப்பட்ட 56 லட்சம் டன் சர்க்கரையில் மே 6 நிலவரப்படி 34.78 லட்சம் டன் சர்க்கரை ஏற்கெனவே 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த சர்க்கரை ஏற்றுமதியில் 35 சதம் (12.17 லட்சம் டன்) இந்தோனே´யாவுக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு 4.33 லட்சம் டன்னும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 3.6 லட்சம் டன் சர்க்கரையும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்த உற்பத்தியில் 43.76 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி தேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் வட வானிலை மற்றும் நடப்பாண்டின் ஏப்ரல் மாத உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த பருவத்தில் 2.74 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் நடப்பு சந்தைப் பருவத்தில் அதன் உற்பத்தி 2.99 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்பதாக ஏஐஎஸ்டிஏ தெரிவித்துள்ளது.