ஈரோடு, ஏப்.30
தமிழ்நாடு அங்ககச்சான்றளிப்புத்துறை மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படி வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கக முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் இதர பயிர்களின் விளைபொருட்களை விவசாயிகள் தனித்துவத்துடன் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டில் அங்ககச்சான்றளிப்புத் துறை கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்டு கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரத்தில் அங்ககச்சான்றுக்கு பதிவு செய்திருந்த அங்கக வேளாண்மை செய்யும் பண்ணைகளை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் மு.சுப்பையா மற்றும் அங்ககச்சான்று தர மேலாளர். ஆர்.கிருஷ்ணவேணி ஆகியோர் ஆய்வு செய்தனர். தாளவாடி வட்டாரம், கெட்டவாடி மற்றும் தாளவாடி கிராமங்களில் உள்ள தனியார் அங்ககப்பண்ணைகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் அங்கக வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் இடுபொருட்கள், அவற்றை பண்ணையில் தயார் செய்யும் முறைகள் குறித்து கேட்டறிந்து, இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள காய்கறிகள், வாழை, தென்னை மற்றும் பழப்பயிர்களை பயிர்களை ஆய்வு செய்தனர்.
மேற்கண்ட ஆய்வின் போது ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பொ.யசோதா, தாளவாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.மகாலிங்கம், ஈரோடு மாவட்ட அங்ககச்சான்று ஆய்வாளர் ராஜ்குமார், விதைச்சான்று அலுவலர்கள் அருணாஜோதி, மாரிமுத்து மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பவன்குமார், உதவி தோட்ட கலை அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.