விதை நேர்த்தியானது முளைக்கும் திறன், முளைப்பு வீரியம் அதிகரிக்க பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்க உதவுகிறது. பல்வேறு நெல் விதை நேர்த்தி முறைகளை கீழே காண்போம்.
விதைகளை தண்ணீரில் ஊற வைத்தல்
முதலில் விதைகளை சாக்கு பை (அ) துணிப்பையில் கட்டி தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும், பின்னர் அதை வெளியே எடுத்து ஈர சாக்கு பையை கொண்டு முடி விட வேண்டும். அதே நாளில் மறுபடியும் தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த விதைகளை நாற்றங்காலில் விதைக்க வேண்டும். இந்த விதை நேர்த்தி விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது.
மாட்டு கோமியம் மற்றும் மாட்டு சாணம் கொண்டு விதை நேர்த்தி செய்தல்
நெல் விதைகளை மாட்டு கோமியம் கொண்டு விதை நேர்த்தி செய்தால் முளைப்புத்திறன் அதிகரிக்கும், முதலில் அரைகிலோ மாட்டு சாணம் மற்றும் 2 லிட்டர் மாட்டு கோமியம் எடுத்து அதை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பிறகு 10-15 கிலோ விதைகளை முதலில் தண்ணீரில் 10-12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் மாட்டு சாண கரைசலில் 5-6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நாற்றங்காலில் விதைப்பதற்கு முன் விதைகளை நிழலில் உலர்த்த வேண்டும்.
மாட்டுக்கோமியம் பயன்படுத்தி விதை நேர்த்தி
மாட்டு கோமியம் 500 மிலி எடுத்து 2.5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். விதைகளை சிறிய பையில் கட்டி இந்த கரைசலில் அரைமணி நேரம் ஊற வைக்கவும். பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
உயிர் உரங்கள் கொண்டு விதைநேர்த்தி செய்தல்
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் அல்லது அசிட்டோபேக்டர் மற்றும் பாஸ்போபேக்டிரியா (தலா 1 கிலோ/எக்டர் அல்லது 125மிலி ) ஆகியவற்றை முதலில் அரிசி கஞ்சியில் கலக்க வேண்டும். நல்ல சுத்தமான தரையில் விதைகளை பரப்பி பின் உயிர் உர கூழ்மத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை நிழலில் 30 நிமிடங்கள் உலர்த்தி விதைக்க வேண்டும்.
முளைப்புத்திறனை மேம்படுத்துவதற்கான விதை நேர்த்தி
விதைகளை பிரகாசமான சூரிய ஒளியில் அரைமணி நேரம் உலர்த்தி விதைப்பு செய்வதால் முளைக்கும் திறன் அதிகரித்து வீரிய நாற்றுகளை பெற முடியும். விதைப்பதற்கு முப்பது மணி நேரத்திற்கு முன்பு நெல் விதைகளை பஞ்சகாவ்யாவில் (35மிலி/லிட்டர் தண்ணீர்) ஊற வைக்க வேண்டும்.
ஆரோக்கியமான நாற்றுகளுக்கான விதை நேர்த்தி
இறுக்கி மூடப்பட்ட சாக்குப் பையில் நெல் விதைகளை எடுத்துக் கொண்டு அதை 24 மணி நேரம் ஊற வைத்து விதைப்பதால் பசுமையான மற்றும் வீரிய நாற்றுக்களைப் பெற முடியும்.