May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் செயல்முறைகள் மற்றும் தரநிலைகள் பயிற்சி

தஞ்சாவூர், மார்ச் 9

அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் செயல்முறைகள் மற்றும் தரநிலைகள் குறித்த பயிற்சி நேற்று (9.3.22) தஞ்சாவூரில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறையின் மூலம் நடைப்பெற்றது. இதில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அங்கக முறையில் சாகுபடி செய்து வருகின்ற 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் முகமது பாரூக் வரவேற்புரை வழங்கினார். இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் (அங்கக வேளாண்மை) கோயம்புத்தூர் கிருஷ்ண வேணி பேசுகையில், தேசிய அங்ககத் திட்டத்தின் செயல் முறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

கோவை அங்ககச் சான்று ஆய்வாளர் செல்லம்மாள், தேசிய அங்கக உற்பத்தி நடைமுறைகள் குறித்தும், நாகப்பட்டினம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை உதவி இயக்குநர் சுதா, அங்கக சான்றளிப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியைச் சேர்ந்த பூச்சிகள் துறை உதவி பேராசிரியர் யசோதா, அங்கக வேளாண்மையில் பூச்சிகளை எவ்வாறு எளிமையான முறைகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் எளிமையாக கட்டுப்படுத்தலாம் என்றும், திருவாரூர் மாவட்ட மூத்த வேளாண் அலுவலர் ‌கண்ணன், பாரம்பரிய நெல்லின் குணாதிசயங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும், திருச்சி மாவட்ட விதைச்சான்று அலுவலர் சபாபதி, அங்ககச் சான்றளிப்பில் இணக்கமற்றவைகள் (Non confirmities) குறித்தும் தொழில்நுட்ப உரைகள் விவசாயிகளுக்கு பட விளக்க காட்சி மூலம் தெளிவாக விளக்கப்பட்டது. மேலும் பயிற்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டது.

பயிற்சியில் இறுதியாக விதைச்சான்று அலுவலர் மணிமேகலை நன்றியுரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விதைச் சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) ஆனந்த பிரியா செய்திருந்தார். இப்பயிற்சியில் அனைத்து விதைச்சான்று அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Spread the love