May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக நெல் சாகுபடியில் பேசில்லஸ் சப்டில்லிஸ் நுண்ணுயிரியின் பயன்பாடு

நெற்பயிரை பல்வேறு வகையான பூசண நோய்க்காரணிகள் தாக்கி, இலைப்புள்ளி, குலைநோய் மற்றும் இலையுறை கருகல் போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றை இரசாயன பூச்சிக் கொல்லிமருந்துகள் இல்லாமல் இயற்கைமுறையில் கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. இந்நிலையில், அங்கக முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நோய் எதிரி நுண்ணுயிரிகளை பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்தலாம். இயற்கையாக மண்ணில் எண்ணிலடங்காத நுண்ணுயிரிகள் உள்ளன. அவற்றில் சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் மற்றும் பேசில்லஸ் சப்டில்லிஸ் போன்ற பாக்டீரிய நுண்ணுயிரிகள் பயிர்களை தாக்கும் பூஞ்சாணத்தை அழிப்பதோடு பயிரின் வளர்ச்சியை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனில், பேசில்லஸ் சப்டில்லிஸ் நுண்ணுயிரியானது வறண்ட சூழலை தாங்கி அதிக காலம் வாழும் திறன் கொண்டுள்ளதால் சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் நுண்ணுயிரியை விட பயிர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது.

பேசில்லஸ் சப்டில்லிஸின் சிறப்பியல்புகள்
1) இந்த நுண்ணுயிரியானது உயிர் எதிர்பொருளை சுரந்து நோயை கட்டுப்படுத்துவதுடன் நைட்ரஜன் தாதுப்பொருளை நிலை நிறுத்தி பயிரின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
2) வேருக்குள்ளும் இவை வாழ்ந்து வருவதால் மண் மூலம் பரவும் நோய்க்காரணிகளை அழித்து பயிரைக் காக்கின்றது.

Ø நெல்லில் விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸ் (பிபிவி57) என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவு தண்ணீர் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, பின்னர் தண்ணீரை வடித்து நாற்றங்காலில் விதைக்க வேண்டும். இதன் மூலம் விதைகள்மூலம் பரவும் நோய்களான இலைப்புள்ளி நோய் மற்றும் குலை நோய்களை தவிர்க்க இயலும்.
Ø நெல் நாற்றுக்களை நனைத்து நடுதல்
2.5 கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸ் (பிபிவி57) யை 25 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை குறைந்தது அரைமணி நேரம் ஊறவைத்து நடவேண்டும்.
Ø நடவு வயலில் இடுதல்
நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து, ஒரு எக்டருக்கு 2.5 கிலோ
பேசில்லஸ் சப்டில்லிஸ் (பிபிவி57) யை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
Ø நெற்பயிரில் தெளித்தல்
பேசில்லஸ் சப்டில்லிஸ் (பிபிவி57) கலவையை லிட்டருக்கு 5 கிராம் என்ற விகிதத்தில் கரைத்து நடவு நட்ட 45 நாட்கள் கழித்து நோயின் தீவிரத்தை பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க நடவேண்டும்.

இதனை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு செலவு குறைவதோடு சுற்றுசு{ழல் மற்றும் இயற்கையை பாதிக்காத அளவில் நெற்பயிரில் தோன்றும் நோய்களை கட்டுப்படுத்தி அங்கக முறையில் உணவு உற்பத்தியை பெருக்கலாம் என திருவாரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் க.ஜெயபிரகாஷ் மற்றும் குடவாசல் விதைச்சான்று அலுவலர் க.பிரபு, தெரிவித்துள்ளனர்.

Spread the love