புதுக்கோட்டை, ஆக. 2
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு, அங்கக முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி திருவாக்குடி கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ரெங்கசாமி, தலைமை வகித்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கலா கருப்பையா முன்னிலை வகித்தார்.
வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவி பேராசிரியர் சாந்தி, கலந்து கொண்டு, பாரம்பரிய நெல் இரகங்களின் முக்கியத்தும் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றியும், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்யும் முறைகள், நாற்றாங்காலில் அடியுரமாக மட்கிய தொழுஉரம், மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கு இடும் முறைகள் குறித்தும், நடவு வயலில் தக்கைப்பூண்டு, சணப்பு விதைத்து மடக்கி உழுவது குறித்தும், நடவு செய்த 10 ஆம் நாள் நீலப்பச்சை பாசி எக்டருக்கு 10 கிலோ வீதம் இடுவது குறித்தும், இலை வழியாக 3 சத பஞ்சகாவ்யா கரைசல் தெளிப்பு, களை நிர்வாகம் மற்றும் நெற்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை ஒருங்கிணைந்த முறைகளான உழவியல், இயந்திர முறைகளில் கட்டுப்படுத்துவது குறித்தும், தாவர பூச்சிக்கொல்லிகள், பூச்சி விரட்டிகள் தயாரித்தல், 5 சத வேப்பங்கொட்டைச் சாறு கரைசல் தெளிப்பு, விளக்குப்பொறி இனக்கவர்ச்சி பொறிகளின் முக்கியத்துவம் பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
விதைச்சான்று அலுவலர் இளஞ்செழியன், அங்கக முறையில் சாகுபடி செய்யும் விளை பொருட்களுக்கான சான்று பெறுவது குறித்தும், விதைப்பண்ணை அமைப்பது சந்தைப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் த.லெட்சுமி பிரபா அனைவரையும் வரவேற்று பேசினார். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.