June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள்

நமது நாடு விவசாய நாடு. நமது வேளாண் பெருமக்கள் தொன்று தொட்டு இயற்கை சார்ந்த வேளாண் முறைகளை கையாண்டு வந்துள்ளனர். பின்னர், விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறுவதற்காக செயற்கை உரங்களையும், பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளையும் பயன்படுத்த தொடங்கினர். இவைகளின் மிகுந்த அளவு பயன்பட்டால், மண்ணின் இயற்கை வளம் குறைந்து, மண்ணில் வாழும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு மிகவும் குறைந்தது. மேலும், மண்ணின் கரிமச்சத்தின் அளவு 0.5 சதவீத்திற்கும் கீழாக குறைந்தது. மண்ணின் வளம் நன்றாக இருக்க வேண்டுமானால், மண்ணின் கரிமச் சத்தின் அளவு 2 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை அதிகரித்து, மண்வளத்தை பெருக்க முடியும். எனவே, இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் ஆகியவற்றை தவிர்த்து பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைந்த பண்ணைய முறை பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுதல், பயிர் கழிவுகள், இதர வேளாண் கழிவுகள் அங்கக உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், மண்புழு உரங்கள், பசுந்தாள் உரங்கள் மற்றும் உயிர்க்கட்டுப்பாட்டு காரணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை வழியில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுபடுத்தி செய்யும் வேளாண் முறையே அங்கக வேளாண்மை ஆகும். அங்கக வேளாண் முறையில் மண்ணின் பௌதிக, இரசாயன மற்றும் உயிரியல் பண்புகள் மேம்பட்டு மண் வளம் மேம்படும். இதனால் பயிர் வளர்ச்சிக்கு உகந்த எல்லா சத்துகளும் கிடைப்பதால், விளைச்சல் பெருகுவதோடு, தரமான விளைபொருட்களும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், மண் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதை அங்கக வேளாண்மை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது. பொதுவாக பயிர் விளைச்சலானது விதைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படும் விதைகளின் தரத்தை பொருத்துள்ளது. தரமான விதைகள் மற்றும் மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பங்களை கையாளுவதால், சுமார் 40 சதவீதம் அதிகரித்த விளைச்சலை பெறலாம்.

அங்கக விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள்

  1. நிலத்தேர்வு : அங்கக விதை உற்பத்திக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலமானது, குறைந்தது 3 வருடங்களுக்கு இரசாயன பயன்பாடு இல்லாமல், அங்கக முறையில் பயிர் உற்பத்தியை மேற்கொள்ளப்பட்ட நிலமாக இருக்க வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நிலமானது தாழ்வான நிலப்பகுதியாக இருக்கக் கூடாது. இதனால் இரசாயன பயன்பாட்டில் உள்ள வயல்களிலிருந்து இரசாயன பொருள்களின் கழிவுகள் நீருடன் கலந்து அங்கக நிலத்தில் வடிவது தவிர்க்கப்படும்.
  2. விதைத்தேர்வு விதையானது, அங்கக முறையில் பயிர் செய்யப்பட்டு பெறப்பட்ட விதையாகவும், சான்று பெற்ற விதையாகவும் இருத்தல் வேண்டும்.
  3. வயல் இடைவெளி பகுதி அங்கக விதை உற்பத்தி வயலானது, இரசாயன பயன்பாட்டில் உள்ள நிலத்தில் இருந்து 3 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.
  4. பயிர் விலகு தூரம் விதைச்சான்றளிப்பு பெற பதிவு செய்ய வேண்டுமானால் அந்தந்த பயிர்களுக்கு பரிந்துரைக்கப்படும் பயிர் விலகு தூரத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும், தன் மகரந்த சேர்க்கை பயிர்களான நெல் மற்றும் பயறு வகை பயிர்களுக்கு 3 மீட்டர் இடைவெளியும் மற்ற அயல் மகரந்த சேர்க்கை பயிர்களான சோளம், மக்காச்சோளம், கம்பு மற்றும் காய்கறி விதை பயிர்களுக்கு 100 முதல் 1600 மீட்டர் வரை பயிர் விலகு தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.
  5. உர நிர்வாகம் அங்கக விதை உற்பத்திக்கு பரிந்துரைக்கப்படும் உரங்கள்
    தொழு உரம், மண்புழு உரம், மக்கிய களைகள், ஊட்டம் ஏற்றிய தொழு உரம், எண்ணெய் வித்துகளின் புண்ணாக்கு, பசுந்தாள் உரங்கள்
  6. திரவ நிலை உரங்கள்
    பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், அமிர்தக்கரைசல், இளநீர், கோமியம், பயனுள்ள நுண்ணுயிர் கரைசல்
  7. விதை நேர்த்தி பொதுவாக அங்கக விதை உற்பத்தியில் விதை நேர்த்திக்கு உயிர் உரங்கள், தாவர இலை கரைசல்கள், இலைப்பொடிகள், பஞ்சகாவியா மற்றும் உயிர்க்கட்டுப்பாட்டு காரணிகள் பயன்படுத்தலாம்.
  8. கலவன் அகற்றுதல் விதைப்பயிரின் இனத்தூய்மையை பராமரிக்க, விதைப்பயிரின் புறத்தோற்றத்திலிருந்து வேறுபடும் பயிர்களை அடையாளம் கண்டறிந்து பயிரின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களான பூக்கும் முன், பூக்கும் பருவம் மற்றும் அறுவடைக்கு முன்பும் கலவன்களை அகற்ற வேண்டும்.

9.அறுவடை மற்றும் சேமிப்பு விதைகளை சேமிக்கும்போது விதைகளின் வயது முதிர்ச்சியினை கட்டுப்படுத்தவும், பூச்சி, பூஞ்சாண தாக்குதலில் இருந்து விதைகளை பாதுகாக்கவும். விதைகளை இயற்கை பொருட்கள் கொண்டும் (நொச்சி, சம்பங்கி விதைத்தூள், மஞ்சள் கிழங்குத்தூள், வசம்பு கிழங்குத்தூள் (1:100)) சேமிப்பிற்கு முன் விதை நேர்த்தி செய்து 6 முதல் 12 மாதங்கள் வரை சேமிக்கலாம்.

இத்தகவலை, தேனி விதைப்பரிசோதனை அலுவலர், ம.மகாலெட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் முனைவர் மு.சத்தியா, ஜெ.மகிஷா தேவி தெரிவித்தனர்.

Spread the love