June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மைக்கு பல தானிய விதைப்பு அவசியம்

திருவாரூர், மே 27

பயிர்களுக்கு தொடர்ச்சியாக இரசாயன உரங்களும், பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் நுண்ணுயிர்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டு மண்வளம் குன்றிவிடுகின்றது. மேலும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான நஞ்சற்ற சத்தான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், இயற்கை விளைபொருளை நோக்கி நுகர்வோர்களின் தேடலும் அதனை விளைவிக்கும் ஆர்வத்தை விவசாயிகளிடமும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறாக இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் விவசாயிகள், பல ஆண்டுகளாக இராசயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாழ்பட்ட விளைநிலங்களை எவ்வாறு மேம்படுத்துவது, இயற்கை விவசாயத்தை எப்படி துவங்குவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு வளம் இழந்துள்ள மண் வளத்தை மீட்டு எடுக்கவும், இயற்கை விவசாயத்தை துவங்குவதற்கும் விவசாயிகள் முதலில் மேற்கொள்ள வேண்டியது பல தானிய விதைப்பு நடவடிக்கையாகும். இம்முறையில் தானிய வகை பயிர்களாக சோளம் ஒரு கிலோ, தினை, சாமை, தலா 250 கிராம், பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை தலா ஒரு கிலோ, எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு, தலா 2 கிலோ, எள் 500 கிராம், பசுந்தாள் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை, தலா 2 கிலோ, நரிப்பயறு 500 கிராம், கொள்ளு, ஒரு கிலோ, நறுமண பயிர்களான கடுகு 500 கிராம், வெந்தயம், சீரகம், தலா 250 கிராம், கொத்தமல்லி ஒரு கிலோ ஆகியவற்றை ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும். இவ்விதைகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்தவேண்டும் என்பது கட்டாயமில்லை. நிலத்தின் பரப்பு, கிடைக்கும் விதைகளை பொறுத்து ஒவ்வொரு வகை பயிர்களில் நான்கு இரகத்தை விதைக்க வேண்டும். விதைக்கப்பட்ட இப்பயிர்கள் வளர்ந்து 45 முதல் 50 நாட்கள் வளர்ந்து பூத்த பிறகு செடிகளை நன்கு மடக்கி உழவு செய்ய வேண்டும். இம்முறையை நிலங்களில் 3 முறை செய்யலாம். இதனை பின்பற்றுவதால், மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், ஊட்ட சத்து சமச்சீராக கிடைக்க வழிவகை ஏற்படுகின்றது. பல ஆண்டுகளாக பயன்படுத்திய செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறைவதோடு மண்ணின் கரிமசத்தின் அளவு அதிகரிக்கின்றது. பல தானிய பயிர் விதைத்து மடக்கி உழுத பிறகு, இயற்கை உரங்களான சாணம், கோமியம், பஞ்சகாவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை துவங்கலாம் என திருவாரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் க.ஜெயபிரகாஷ் மற்றும் குடவாசல் விதைச்சான்று அலுவலர் க. பிரபு தெரிவித்துள்ளார்கள்.

Spread the love