August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மையில் உயிரியல் முறையில் பூச்சிகளை கட்டுப் படுத்தும் வழிமுறைகள்

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தகவல்

தேனி, ஜூலை 20

அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மை என்பது சுற்றுச்சூழல் சார்ந்த இயற்கை வழி பூச்சி கட்டுப்பாடு முறையாகும். பயிர்களில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகியபின் அவற்றைக் கட்டுப்படுத்துவதை விட அவைகளின் எண்ணிக்கை பொருளாதார சேத நிலையை அடையாவண்ணம் பல்வேறு உத்திகளை கையாள்வது அங்கக பூச்சி மேலாண்மையின் அடிப்படை கொள்கையாகும். அறிவு மற்றும் திறன் சார்ந்த தொழில் நுட்பங்களின் உதவியுடனும் உழவர்களின் ஒன்றுபட்ட கூட்டு முயற்சியினாலும் பூச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
பயிர்களில் தீங்கு செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு இயற்கை தந்த நன்கொடை பூச்சிகளின் “இயற்கை எதிரிகள்” இவ்வாறு உயிருள்ள இயற்கை உயிரினங்களைக் கொண்டு தீங்கு செய்யும் பூச்சியினங்களை கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் பூச்சி மேலாண்மை என்று பெயர். உயிரியல் காரணிகளை ஊன் உண்ணிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் நோய் கிருமிகள் என பிரிக்கலாம்.

ஊன் உண்ணிகள் (அ) விழுங்கிகள்
இவை பெரும்பாலும் உருவில் பெரியவை, சுறுசுறுப்பாக, வேகமாக நகரும் குணம் கொண்டவை. இவைகள் கூர்மையான பார்வைத்திறன் கொண்டிருக்கும். இவற்றைவிட உருவில் சிறிய பூச்சிகளை அதிக எண்ணிக்கையில் உண்ணும் திறன் படைத்தவை. நாம் அன்றாடம் பார்க்கும் தட்டான் ஊசித்தட்டான் போன்றவை ஊன் உண்ணி வகையினை சார்ந்தவை. பருத்தி, தக்காளி, வெண்டை, அவரை, உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயிர்களை தாக்கும் அசுவினி, வெள்ளை ஈ, தாதுப் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் இளம் புழுக்களை பச்சை கண்ணாடி இறக்கைப் பூச்சி கொண்டு கட்டுப்படுத்தலாம். பப்பாளி, சீதாப்பழனம், திராட்சை, மா, மாதுளை, சப்போட்டா போன்ற பயிர்களை தாக்கும் மாவுப் பூச்சிகள் மற்றும் செதில் பூச்சிகளை கிரிப்டோ லீமஸ் பொறிவண்டுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

ஒட்டுண்ணிகள்
குளவி மற்றும் ஈ இனத்தைச் சார்ந்த பூச்சிகள் மற்ற பூச்சிகளில் தன் இனத்தை பெருக்கிக்கொள்ளும் குணம் படைத்தவை. ஒட்டுண்ணிகள் உருவில் சிறியவை, இரையை தேடிச்சென்று அவற்றுள் முட்டையிடும் திறன்படைத்தவை. ஊன் உண்ணிகளைப் போன்று இவை இரையை உடனடியாக கொன்று உண்பதில்லை. ஒட்டுண்ணிகளை முட்டை ஒட்டுண்ணி, புழு ஒட்டுண்ணி மற்றும் கூட்டுப்புழு ஒட்டுண்ணி என மூன்று வகைகள் உள்ளன. முட்டை ஒட்டுண்ணி பூச்சிகளின் முட்டைகளை தேடிப்பிடித்து அதன் மீது தன் சிறிய முட்டையை இடுகின்றது. இவற்றில் பூச்சியின் முட்டை முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.

புழு ஒட்டுண்ணி நேரடியாக பூச்சிகளின் புழுக்களினுள் தன் முட்டைகளை இடும். நாளடைவில் புழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுண்ணியின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மடிந்து விடுகின்றன. கூட்டுப்புழு ஒட்டுண்ணி பூச்சிகளின் கூட்டுப்புழுக்களினுள் தன் முட்டைகளை இடுகின்றன. இதனால் பூச்சிகள் கூட்டுப்புழு பருவத்திலேயே அழிக்கப்படுகின்றன.
நெல் பயிரை தாக்கும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் ஒட்டுண்ணி பயன்படுத்தலாம். மக்காச்சோளப்பயிரை தாக்கும் தண்டு துளைப்பான், கத்தரியைத் தாக்கும் காய்ப்புழு, வெண்டையைத் தாக்கும் பச்சைக் காய் புழு தாக்குதலை கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம். தென்னை மரத்தை தாக்கும் கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்த பிரக்கான் பிரிவிகார்னிஸ் பயன்படுத்தலாம்.

நோய்க் கிருமிகள்
இவை பூச்சிகளில் நோயை ஏற்படுத்தி அழித்திடும் தன்மை கொண்டது (பூஞ்சை. பாக்டீரியா, வைரஸ்) பூஞ்சையினங்கள் தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, தண்டு துளைப்பான் மற்றும் இலையை உண்ணும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்தவை. பாக்டீரியாக்கள் புழுக்களை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை தாக்கிய புழுக்களால் அதிகமாக நடமாட முடியாது. உடல் கருப்பு நிறமாகி இறுதியில் பூச்சி இறந்துவிடும் பச்சைக்காய்புழு, புரோடீனியாபுழு, சிவப்பு கம்பளிப்புழு, எழுமிச்சை வண்ணத்துப்பூச்சி, காவடிப்புழு போன்றவை இந்த வகை பாக்டீரியகாக்களால் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பெவேரியா, வெர்டிசிலியம், மெட்டாரைசியம், வகையைச்சார்ந்த பூஞ்சையினங்களும் பேசில்லஸ், சூடோமோனாஸ் வகையினை சார்ந்த பாக்டீரியாக்களும் நியூக்ளியார் மற்றும் கிரானுலோசிஸ் வகையைச் சார்ந்த வைரஸ்களும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, அங்கக முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்களில் தென்படும் பூச்சியினங்களை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் உயிரியல் முறை பூச்சி கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பயன்பெறுமாறு தேனி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் திலகர் தெரிவித்துள்ளார்.

Spread the love