August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மையில் பயன் படுத்தப்படும் இடுபொருட்கள் – ஒரு பார்வை

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அங்ககச் சான்று பெற பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை உதவி இயக்குநர்தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்கள், தமிழ்நாடு அங்கக சான்றளிப்பிற்கு தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கால்நடைபராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வன பொருட்கள் சேகரிப்பு செய்வோரும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள பெருவணிக நிறுவனங்கள், அங்கக வேளாண் விற்பனை செய்வோரும், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து கொள்ளலாம்.

அங்கக சான்றளிப்பு துறையின் அனுமதியின்றி பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட இடுபொருட்கள் விவரம்.

மண் வளப்பாதுகாப்பிற்கு, பண்ணையிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தொழுஉரம், கோழி உரம், கால்நடைகளின் சிறுநீர், பயிர்க் கழிவுகள், பசுந்தாள் உரம் வைக்கோல் மற்றும் இதர வகைகள், செயற்கை சேர்மானங்கள் சேர்க்கப்படாத மக்கு, ரசாயன பாதுகாப்பு முறைகளுக்கு உட்படுத்தப்படாத மரம் இழைப்புகள், தாவர கழிவுகள், பாக்டீரியா நுண்ணுயிர் தயாரிப்புகள், உயிர் உரங்கள், உயிர்மை இயக்க தயாரிப்புகள், தாவர கசாயம், மண்புழு உரம் மக்கு, பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு, தாவரக் கசாயம் (வேம்பு, பூண்டு, புங்கன் போன்ற வகைகளில் கசாயங்கள்), காளான் கசாயம், குளோரல்லா கசாயம், குனிமக்களி (பெண்டோனைட், பெரலைட், வேர்மிகுளிட் ஜியோ லைட்) சோடியம் பை கார்பனேட் (சோடா உப்பு), வைரஸ் நுண்ணுயிர் தயாரிப்புகள் (என் பி வைரஸ்) பூஞ்சாண மற்றும் பாக்டீரியா தயாரிப்புகள், ஒட்டுண்ணிகள், ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகள், கவர்ச்சிப் பொறிகள், மூடாக்குகள்.

சான்றளிப்பு துறையின் அனுமதி பெற்றபின் பயன்படுத்தக்கூடிய இடுபொருட்கள் விபரம்.
பிற பண்ணைகளிலிருந்து வாங்கப்படும் எவ்விதமான பதனிடும் சேர்க்கப்படாத உறைந்த ரத்தத் தூள், மாமிச தூள், எலும்பு தூள், இறகுத்தூள், தாவர கழிவுகள், பாக்டீரியா நுண்ணுயிர் தயாரிப்புகள், உயிர் உரங்கள், மண்புழு உரம்.

அங்ககப்பண்ணையில் பயன்படுத்தக்கூடாத இடுபொருட்கள்
புகையிலை கசாயம், பயிர் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் கனிமத்தூள், மனித கழிவுகள்.

மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கும் அல்லது கடைபிடிக்க ஆர்வமுள்ள விவசாயிகள் அங்ககச்சான்று பெற விருதுநகர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Spread the love