June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மையில் பூச்சிகளை நிர்வகிக்கும் முறை

அங்கக வேளாண்மையில் பயிர்களின் விளைச்சல் இழப்பினை உண்டு பண்ணும் பல்வேறு வகையான காரணிகளில் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அங்கக வேளாண்மையில் பயிர்களை சேதத்திற்கு உண்டுபண்ணும் பூச்சிகளை எவ்வாறு இயற்கை முறையில் நிர்வகித்து பயிர்களை பாதுகாக்கலாம் என விதைச்சான்று உதவி இயக்குனர் முகமது பரூக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

பூச்சி மேலாண்மையில் உழவியல் மற்றும் உயிரியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உழவியல் முறை

கோடை உழவு, சரியான இரக தேர்வு, சரியான பட்டம், விதைநேர்த்தி, ஊடுபயிர், பயிர் மூடாக்கு, மண் அணைத்தல் ,எதிர்ப்பு திறன் பெற்ற பயிர் ரகங்கள், சரியான களை, சத்து மற்றும் நீர் மேலாண்மை போன்றவை சிறந்த உழவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

மேலும் அங்கக வேளாண்மையில் பூச்சிகளை கட்டுப்படுத்திட வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே பூச்சிகளை கண்காணிக்க விளக்கு பொறி, ஒட்டும் பொறி, இனக்கவர்ச்சிப் பொறி போன்றவற்றை பயன்படுத்தலாம். பொதுவாக மாலை நேரங்களில் விளக்குப் பொறிகளை பயன்படுத்தி தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் . ஒரு அந்துப்பூச்சி சுமார் 50 முட்டைகள் வரை இடும். ஒரு அந்துப் பூச்சியை கவர்ந்து அழித்தாலே பயிர் சேதத்தை உண்டு பண்ணும் 50 புழுக்களை தடுத்திட முடியும். பொதுவாக நிறங்கள் பூச்சிகளைக் கவரும் தன்மை உடையவை என்பதால் மஞ்சள், வெள்ளை, ஊதா, நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழித்து விட பயன்படுகிறது. மஞ்சள் நிறமானது அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ போன்ற பூச்சிகளையும் ,நீலம் ஊதா வண்ணங்கள் இலைப்பேன், பூப்பேன் போன்ற பூச்சிகளையும் கவர்ந்து அழித்திடும். சிறிய பிளாஸ்டிக் டப்பா, பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் தார்பாலீன்களை தேவையான அளவிற்கு எடுத்துக்கொண்டு பயன்படுத்தி ஒட்டும் திரவத்தினை தடவி ஒட்டும் பொறிகளாக பயன் படுத்தலாம். பூச்சிகளை கூட்டமாக கவர்ந்து அழித்திட ஏக்கருக்கு 5 முதல் 10 வரையிலான இனக்கவர்ச்சி பொறிகளை 40 மீட்டர் இடைவெளியில் வைத்து வார ஒருமுறையேனும் கண்காணிக்க வேண்டும்.
பூச்சிகளின் இனப்பெருக்கத்தை மட்டுப்படுத்த
ஊடுபயிர் மற்றும் வரப்புப்பயிர் சாகுபடி பூச்சிகளை மட்டுப்படுத்தும் ஒரு சிறந்த தொழில்நுட்பம் ஆகும். வரப்பு ஓரங்களில் சோளம், மக்காச்சோளம், கம்பு, தக்கைப்பூண்டு போன்ற வேறு குடும்பத்தைச் சார்ந்த மிகவும் வேகமாக வளரும் குணமுடைய பயிர்களை 2 முதல் 4 வரிசைகளில் அடர்த்தியாகவும் வரிசையாகவும் விதைத்து பூச்சிகள் வயலினுள் நுழைவதை குறைத்திட முடியும்.

உயிரியல் முறை

பூச்சிகளை கட்டுப்படுத்திட உயிருள்ள உயிரிகளை பயன்படுத்துவது உயிரியல் முறையாகும். இவற்றுள் ஒட்டுண்ணிகள், இறை விழுங்கிகள் மற்றும் நுண்ணுயிர்கள் அடங்கும். அங்கக பண்ணைகளில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை பயன்படுத்தாமல் இருந்தாலே பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் இயற்கையாகவே குறைந்து காணப்படும். அவ்வாறான வயல்களில் தீமை செய்யும் பூச்சிகளுக்கு நிகராக நன்மை செய்யும் பூச்சிகளும் அதிகரித்து இருக்கும். தீமை செய்யும் பூச்சிகளுக்கும் நன்மை செய்யும் பூச்சிகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் 4 :1 என்ற அளவில் இருந்தால் எந்தவித பூச்சி மேலாண்மை முறைகளையும் கையாள வேண்டிய அவசியம் இல்லை.

வேம்பு, நொச்சி, காட்டாமணக்கு, பூண்டு, மிளகாய், ஆடுதிண்ணாபாலை, பீனாரிசங்கு, சிறியாநங்கை, இஞ்சி, இலுப்பை, ஆடா தொடா, எருக்கு போன்ற குறிப்பிடத்தக்க பூச்சி விரட்டி தாவரங்களில் இருந்து கரைசல் தயாரித்து பூச்சி மேலாண்மையில் பயன்படுத்தலாம்.

இவ்வாறு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் நஞ்சு இல்லாத வேளாண்மையில் பூச்சிகளை கட்டுக்குள் வைக்கலாம் எனக்கூறினார்.

Spread the love