August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மை

அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மை என்பது சூற்றுச்சூழல் சார்ந்த இயற்கை வழி பூச்சி கட்டுபாடு முறையாகும். பயிர்களில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவு பெருகிய பின் அவற்றை கட்டுப்படுத்துவதைவிட அவைகளின் எண்ணிக்கை பொருளாதார சேத நிலையை அடையா வண்ணம் பல்வேறு உத்திகளை கையாள்வது அங்கக பூச்சி மேலாண்மையின் அடிப்படைக் கொள்கையாகும்.

அங்கக வேளாண்மையில் இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கக முறையில் பயிர்களில் தோன்றும் பூச்சிகளின் சேதத்தினை குறைத்திட சுற்றுச்சூழல் அடிப்படையிலான சில பூச்சி மேலாண்மை முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

உழவியல் முறைகள்
உழவியல் முறை என்பது வழக்கமான பண்ணை நடவடிக்கைகள் மூலமாக பூச்சிகளைக ட்டுக்குள் வைத்திருப்பதாகும். ஒரு நிலத்தில் ஒரே வகையான பயிரினை தொடர்ந்து பயிரிடும் போது ஒரு குறிப்பிட்ட பயிர் வளர்ச்சி சத்தின் அளவு அந்நிலத்திலிருந்து அதிகளவில் உறிஞ்சபட்டு சத்து பற்றாகுறை ஏற்படுகின்றது. பயிர் சத்து குறைபாடு பூச்சிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் தாக்கத்தையும் ஊக்குவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் கலப்புபயிர், ஊடுபயிர் போன்ற முறைகளை கடைபிடித்துள்ளனர். ஒன்றிற்கும் மேற்பட்ட பயிர்களை ஒரு குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடும் போது சத்துக்கள் மறு சுழற்சியடைகின்றன. இதனால் மண்ணின் வளம் மேம்படுகிறது. வளமான மண்ணில் வளரும் திடமான பயிர்களில் பூச்சிகளின் தாக்கம் குறைந்தே காணப்படும் .ஊடுபயிர் செய்யப்பட்ட நிலங்களில் பூச்சிகளால் விருப்பு வெறுப்புகளுக்குள்ளான பயிர்கள் இரண்டும் காணப்படுவதால் அவை பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுக்குள் வைக்கும் சுற்றுச்சூழலை உருவாக்குகின்றது.

பயிர் ரக தேர்வு
நல்ல தரமான விதைகளையும், பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் கொண்டுள்ள இரகங்களையும், குறுகிய காலங்களில் முதிர்வடையும் இரகங்களையும் தேர்ந்தெடுத்து பயிரிடுவதன் மூலம் அங்கக வேளாண்மையில் சீரான இலாபத்தை ஈட்டிட முடியும்.

விதைக்கும் பருவம்
விதைகளை விதைக்கின்ற அல்லது பயிர்களை நடுகின்ற பருவங்களை சிறிதளவு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் போது அந்தபயிர் ஒரு குறிப்பிட்ட பூச்சியின் தாக்குதலிருந்து தப்பித்து கொள்ளும். உதராணமாக சம்பா பருவத்தில் முன்கூட்டியே நடவு செய்யும் நெற்பயிரில் இலைசுருட்டு புழுக்களின் தாக்கம் குறைந்து காணப்படும். செப்டம்பர் மாதத்தில் நடப்படும் நெற்பயிரில் ஆனைக் கொம்பனின் தாக்குதல் அதிகரித்து காணப்படும்.

பயிர் அடர்த்தி
பயிர் விதைப்பின் அடர்த்தியோ, நடவின் அடர்த்தியோ சிறிதளவு மாற்றத்திற்கு உட்படுத்தும் போது பூச்சிகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் தாக்குதலிலும் மாற்றம் ஏற்படுகின்றது.

கவர்ச்சிபயிர்கள்
ஒரு குறிப்பிட்ட பூச்சிக்கு ஒரு குறிப்பிட்ட பயிர் விருப்பத்தக்க உணவு பயிராக விளங்கிடும். அவ்வாறான பயிர்கள் கவர்ச்சி பயிர்கள் என்று அழைக்கின்றோம். கவர்ச்சி பயிர்களை முக்கிய பயிர்களினூடே ஒரிரு வரிசையிலோ, வரப்புகளிலோ பயிரிட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக பூச்சிகள் கவர்ச்சி பயிர்களில் முதலில் தாக்குதலை துவக்கும். அப்போது அவற்றை கட்டுபடுத்துவது மிக எளிது.

இயந்திரமுறைகள்
இயந்திர கருவிகளின் உதவியுடன் பூச்சிகளை சேகரித்து அழிப்பது இயந்திர முறை பூச்சி மேலாண்மையாகும்.

விளக்குப்பொறி
பெரும்பாலான விட்டில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் வெளிச்சத்தால் கவரப்படுபவையாகும். எனவே இரவு 07.00 மணி முதல் 11.00 மணி வரை வயல்களில் விளக்குபொறிகளை வைப்பதன் மூலம் அந்துபூச்சிகள் மற்றும் வண்டுகள் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. பல்வேறு வகையான விளக்கு பொறிகள், பூச்சி கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டாலும் மண்ணெண்ணை விளக்கு பொறி, மின்சார விளக்கு பொறி,சோலார் விளக்குபொறிபோன்றவை பூச்சி கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகிறது.

வண்ண ஒட்டு பொறிகள்:
வண்ண அட்டைகளில் ஒட்டும் பசை, ஆமணக்கு எண்ணைய், வாசலின், கிரிஸ் தடவப்பட்டு பூச்சி கட்டுப்பாட்டிற்காகவும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பயன்படுகிறது.
பூச்சிகளை கண்காணிக்க ஏக்கருக்கு 5 என்ற அளவிலும் அவற்றை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு 25 என்றஅ ளவிலும் ஒட்டும் பொறிகள் பரிந்துரைக்கப்படுகிறன்றன. இலைப்பேன், பழ ஈ, சுருள் பூச்சி, வெள்ளை ஈ, அசுவினி போன்றவை மஞ்சள் நிற வண்ண ஒட்டும் பொறிகளால் கவரப்படுபவை.

இனக்கவர்ச்சி பொறிகள்:
பூச்சிகள் ஒன்றோடொன்று தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளவும், எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இன பெருக்கத்திற்காகவும் ஒரு வித வாசனை திரவத்தினை சுரந்து காற்றில் பரப்பி விடுகின்றன. இதுவே இனக்கவர்ச்சி திரவம் எனப்படுகிறது. பூச்சிகளால் சுரக்கப்படும் இனக்கவர்ச்சி திரவத்தின் தன்மை மற்றும் அவற்றின் பண்புகள் கண்டறியப்பட்டு அவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பூச்சிகளை கவர்ந்து அழித்திட பயன்படுகிறது. இதன் மூலம் ஆண், பெண் பூச்சிகளை தனித்தனியாகவே அல்லது இரண்டையும் கூட்டாகவோ கவர்ந்து அழித்திடலாம். இனக்கவர்ச்சி பொறிகளை பயிர்களின் இலைபரப்பிற்கு மேல் இருக்கும்படி பொருத்துவது மிகவும் அவசியமானதாகும்.

பறவை தாங்கிகள்:
பறவை உட்காரும் இடங்களை செயற்கையாக நிறுவுவதன் மூலம் பறவைகள் உட்கார்ந்து புழுக்களை உண்ணும் சூழ்நிலையை உருவாக்கலாம். இவற்றின் மூலம் புழுக்களையும் வயல் எலிகளையும் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

உழவர்களின் கூட்டு முயற்சியினாலும் கீழ்க்கண்ட சில வழிமுறைகளை கடைபிடிப்பதாலும் பூச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அவைகள் முறையே :
· சீரான பயிர் முறைகளையும் பயிர் உற்பத்தி முறைகளையும் கடைபிடித்தல்.
· பயிர் சூழலையும் அவற்றில் தோன்றும் பூச்சி இனங்களையும் அவற்றின் இயற்கை எதிரிகளையும் நன்கு புரிந்து செயல்படுதல்.
· பூச்சிகளின் வாழ்க்கை முறைகளையும், அவை தோன்றும் பருவங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் நன்கு அறிந்து மேலும் அவை பெருகாவண்ணம் அவற்றிற்கான வருமுன் காப்பு முறைகளை கையாளுதல்.
· உள்ளுரிலேயே எளிதில் கிடைக்கப் பெறும் இயற்கை பொருட்களை கொண்டு பயிர்களில் தோன்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகளை கடைபிடித்தல் ஆகும்.

மேற்கண்டவாறு பூச்சிமேலாண்மையில் சூற்றுச்சூழல் சார்ந்த இயற்கை வழி பூச்சி கட்டுபாடு முறைகளை கடைபிடித்து பயன்பெற கன்னியாகுமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஷீபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Spread the love