June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மையில் வளர்ச்சி ஊக்கிகள்

சிவகங்கை, ஜூன் 17

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாரம் விரிவாக்க சீரமைப்புத்திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் தேவகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அங்கக வேளாண்மையில் வளர்ச்சி ஊக்கிகள் பற்றி (அமுதக்கரைசல், அரப்பு மோர்க் கரைசல் மற்றும் எலுமிச்சை முட்டைக் கரைசல்) போன்றவைகளை தயாரித்தல் பற்றி பின்வருமாறு விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

அமுதக்கரைசல்
அமுதக்கரைசல் ஓர் உடனடி வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. இதற்கு ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ கிராம் மாட்டுச் சாணம் மற்றும் 250 கிராம் பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லம் தேவைப்படுகின்றது. 10 லிட்டர் நீரில் மாட்டுச் சாணத்தையும், மாட்டுச் சிறுநீரையும் ஊற்றி,பொடி செய்த பனங்கருப்பட்டியை இட்டு கரைசலை கட்டியில்லாமல் தயார் செய்து 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.இக்கரைசல் ஒரு லிட்டருக்கு, 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் (1:10) நீர்த்தக்கரைசல் தயார் செய்து கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். இந்தக்கரைசல் உடனடியாக தழை ஊட்டத்தை இலை வழியாக செடிகளுக்குக் கிடைக்கச் செய்வதோடு பூச்சிகளையும் விரட்டுகிறது.

அரப்பு மோர்க் கரைசல்
அரப்பு மோர்க் கரைசல் இரண்டு கிலோ கிராம் அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளைத் தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதில் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்த்து இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்க விட வேண்டும். இதன் பின்னர் கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். பூச்சிகளைக் கட்டுப்படுத்தி பயிர்களை வளர்க்கின்றது. மேலும் பூஞ்சாணம் நோயைத் தாங்கி வளர்கிறது.

எலுமிச்சை முட்டைக் கரைசல்

அலுமினியம், இரும்பு, பித்தளை போன்ற பாத்திரங்கள் இல்லாமல் மூடி உள்ள பிளாஸ்டிக் வாளி அல்லது பிளாஸ்டிக் டிரம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பாத்திரத்தில் 10 முட்டைகளை முழு ஓட்டுடன் வைத்து எலுமிச்சைப் பழங்களை அறுத்து முட்டைகள் மூழ்கும் அளவுக்கு சாறு பிழிய வேண்டும். அத்துடன் 250 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து விட வேண்டும். வெல்லக் கரைசல் செய்யும் போது வெல்லம் கரையம் அளவுக்கு நீர் கொடுத்தால் போதுமானது. பின்னர், காற்றுபுகாமல் இறுக்கி மூடி 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். 10 வது நாள் மூடியை திறந்து பார்த்தால் முட்டை ஓடுகள் கரைந்து இருக்கும். அழுத்திப்பார்த்தால் ரப்பர் பந்து அழுத்துவது போல் இருக்கும். இதனை கையால் பிசைந்தோ அல்லது மிக்சியில் அரைத்தோ கூழ்போல் செய்ய வேண்டும். இந்த கரைசல் எவ்வளவு அளவில் இருக்கிறதோ அதே அளவுக்கு வெல்லக்கரைசல் அல்லது மொலாசஸ் கரைசல் ஊற்ற வேண்டும். பின்னர் இதனை காற்றுப் புகாமல் மூட வேண்டும். 20வது நாள் கரைசல் தயாராகி விடும். எலுமிச்சை வெல்லம் கலந்த வாசனை இருக்கும். பாட்டில்களில் அடைக்கும் போது வாயு வெளியேறுவதால் மூடி வைக்கக் கூடாது. கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலம் 1.5 சத கரைசல் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி லிட்டர் என்ற விகிதத்தில் தயார் செய்து அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

Spread the love