August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் தரச்சான்று பெறுவது எப்படி?

தேனி, ஆக. 4

அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் தரச்சான்று பெறுவது எப்படி என தேனி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை உதவி இயக்குநர் சி.திலகர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் அங்ககச்சான்றளிப்பு துறை, மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்ட நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் அங்ககச் சான்று பெற தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு வனப்பொருட்கள் சேகரிப்பு செய்பவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். அங்கக விளை பொருட்களை பதன் செய்வோரும், ஏற்றுமதி வணிகம் செய்வோரும் பதிவு செய்யலாம். பதிவு கட்டணம் ஒரு வருடத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2700/-ம், பிற விவசாயிகளுக்கு ரூ.3200/-ம், குழுவாக பதிவு செய்தால் ரூ.7200/-ம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400/-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் அங்ககச்சான்று பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்ப படிவம், பண்ணையின் பொது விபரகுறிப்பு, துறையுடனான ஒப்பந்தம், பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர்த்திட்டம், ஆதார் அட்டை நகல், நிரந்தர கணக்கு எண் நகல் மற்றும் விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சான்று கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று அலுவலகத்தை 04546-253554 என்ற எண்ணிலோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Spread the love