October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி பயிற்சி

புதுக்கோட்டை, அக்.8

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) 2021-2022 கீழ் அங்கக வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி என்ற இனத்தின் கீழ் பூவர் கிராமத்தில் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் ஆவுடையார்கோவில் வட்டார விவசாயிகள் 40 நபர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் / வேளாண்மை உதவி இயக்குநர் க.வனஜாதேவி, துவக்கி வைத்து பேசுகையில் நமது சந்ததியினருக்கு ஆரோக்கியமான உணவை அளிப்பதின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து கூறினார்கள். வேளாண்மை அலுவலர் முனியைய்யா, உழவன் செயலி மற்றும் அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்த முழு விளக்கங்களையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.

இப்பயிற்சியில் ஜீவானந்தம், இயக்குநர், இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், புதுக்கோட்டை, கலந்து கொண்டு கீழ்கண்ட தொழில்நுட்ப கருத்துக்களை வழங்கினார்கள்.

பாரம்பரிய நெல் இரகங்களின் சிறப்பியல்புகள் :
வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது. மனிதன் மண், கால்நடை மற்றும் பயிர் அனைத்துக்கும் நல்லது. நேரடி விதைப்பு மற்றும் நடவுக்கு உகந்தது. அதிக கிளைகள் வரக்கூடியது. (27 முதல் 60 வரை). 150 செ.மீ முதல் 162 செ.மீட்டர் வரை வளரக்கூடியது. அதிக வைக்கோல் தரக்கூடியது. (13 டன்) நெல் அரைக்கும்போது 75% அரிசி கிடைக்கும். அதிக நார்சத்து, புரதசத்து நிறைந்தது.

பாரம்பரிய நெல் இரகங்களின் வயது:
பூங்கார் 100 – 105 நாட்கள்
மாப்பிள்ளை சம்பா 165 – 170 நாட்கள்
சிவப்பு கவுனி 135 – 140 நாட்கள்.
கருங்குருவை 120 – 125 நாட்கள்.
சீரக சம்பா 125 – 130 நாட்கள்.

பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவ குணங்கள்:
குடவாலை சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. செரிமான பிரச்சனை, வயிற்றுப் பிரச்சனைகளை குணப்படுத்தும். பூங்கார் கர்ப்பிணி பெண்களுக்கு பத்திய கஞ்சி வைத்துக் கொடுக்க ஏற்றது. சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும். துத்தநாக சத்து நிறைந்தது. சிவப்பு கவுனி இதயத்தை பலப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். கருப்பு கவுனி புற்றுநோய் எதிர்ப்பு சக்தியையும்,
இனசுலீன் சுரப்பதையும் அதிகரிக்கிறது. பாரம்பரிய நெல் அரிசி உடலில் உள்ள கொழுப்பின் அளவை உருவாக்குவதை தடுக்கிறது. நிறம், மணம் ,மரபு வழி நன்மைகள் அதிகம் கொண்டவை.

பயிற்சியின் முடிவில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இப்பயிற்சியை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சு.மகேஸ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் மு.வீரமணி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Spread the love