October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண் மதிப்புக்கூட்டு நிறுவனத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு

திருப்பூர், அக்.12

இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண் நுகர்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தற்பொழுது ஏற்பட்டிருப்பது வரவேற்புக்குரியதாகும். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டாரத்தில் இயற்கை வேளாண் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் அதில் உற்பத்தியாகும் விளை பொருட்களுக்கான தேவை மற்றும் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நஞ்சில்லா விளைபொருள் விவசாயம் குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு தகவல்களை பரிமாறி வந்தாலும், முறையாக அங்ககச்சான்று பெற்று, அங்கக ஆய்வாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமான அங்கக வேளாண் விளைபொருளாக உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் பொழுது அதற்கான மதிப்பு உயர்வது உறுதியாகிறது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அங்ககச் சான்றளிப்புத் துறையானது தமிழகம் முழுவதும் அங்ககச் சான்று அளித்தல், ஆய்வு மேற்கொள்ளுதல், விளைபொருட்களின் தரம் உறுதி செய்தல் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தல் ஆகிய பணிகளை செவ்வனே செயலாற்றி வருகிறது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் சுப்பையா, பொள்ளாச்சி மற்றும் உடுமலை வட்டாரங்களில் இயற்கை வேளாண் சாகுபடி செய்யும் பண்ணைகள் மற்றும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, உடுமலை வட்டாரம், சடையபாளையம் கிராமத்தில் 26 வயதே நிரம்பிய சோனிக்கா என்ற இளந்தொழிலதிபரால் நிர்வகிக்கப்பட்டு வரும் விர்ஜின் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, வழக்கமாக தேங்காய்களை நன்கு உலர வைத்து கொப்பரையாக்கி அதனைப் பிழிந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும். சூரிய வெப்பத்தில் தேங்காய்களை உலர வைக்கும் பொழுதும், கொப்பரைகளை பிழியும் போதும் அதிகளவில் வெப்பம் உருவாகிறது. இதனால் தேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ குணங்கள் வீணாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, வெப்பம் இல்லாமல் குளிர்வித்தல் முறையில் தயாரிக்கப்படும் பரிசுத்த தேங்காய் எண்ணெய்யில் தாய்ப்பாலுக்கு இணையான மோனோலாரிக் அமிலம் இருப்பதால் பல்வேறு மருத்துவ குணங்கள் கொஞ்சமும் குறையாமல் நுகர்வோருக்கு கிடைக்கிறது. முற்றிலும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களை மட்டுமே பயன்படுத்துவதால் நஞ்சில்லா பரிசுத்த தேங்காய் எண்ணெய் நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்க முடிகிறது. தமிழக அரசின் சிறந்த முனைப்புள்ள இளந்தொழிலதிபர் என்ற சாதனையாளர் விருது இந்த இளந்தொழிலதிபருக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது என அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் பொழுது அங்ககச்சான்று மற்றும் விதைச்சான்றுத்துறையைச் சார்ந்த பல்வேறு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Spread the love