January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அதிக மகசூல் பெற தரமான விதைகளை தேர்ந்தெடுப்பீர்

விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இடுபொருள் விதை. தரமான விதைகளை விதைப்பதன் மூலமே அதிக மகசூல் பெறமுடியும். தரமான விதை என்பது விதைச்சான்று துறையினரால் பல கட்டங்களில் வயல் மட்ட ஆய்வு மற்றும் விதைப்பரிசோதனை செய்யப்பட்ட சான்று விதைகளேஆகும். விதைப்பரிசோதனை நிலையத்தில் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிற ரககலப்பு என்று 4 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முளைப்புத்திறன் பரிசோதனையில் விதை மாதிரிகளின் முளைப்புத்திறன் பரிசோதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு விதை மாதிரிக்கும் இயல்பான நாற்றுகள், இயல்பற்றவை கடின விதைகள் மற்றும் உயிரற்ற விதைகள் போன்றவை கண்டறியப்பட்டு முளைப்புத்திறன் நிர்ணயிக்கப்படுகிறது. முளைப்புத்திறன் குறைந்தால் பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் பாதிக்கும்.

வலுவற்ற நாற்றுகள் அல்லது வலுவற்ற பயிர்களை கண்டறிந்து தரமான விதையினை உறுதி செய்து இடுபொருள் செலவினை குறைத்து அதிக மகசூல் பெற விதை பரிசோதனை அவசியமாகும். வலுவற்ற நாற்றுகள் மீண்டும் வளருமா? மற்ற நல்ல நாற்றுக்களை போன்ற பலன் தருமா? என்ற ஐயம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் இந்த வலுவற்ற நாற்றுகள் இயல்பான நாற்றுகளைப் போல வளர்ந்து பயன் தர முடியாது. ஏனெனில் இயல்பான வளர்ச்சியை தரக்கூடிய முக்கிய பாகங்களான வேர், தண்டு அல்லது வளர்நுனி இவற்றில் ஏதேனும் ஒன்றில் பழுது, குறைபாடு, முழு வளர்ச்சியின்மை, வேர், தண்டு மற்றும் வளர்ச்சிக்கான முக்கியமான சில பகுதிகள் இல்லாமல் போவதன் காரணமாக நாற்றுகளின் வளர்ச்சி தடைபடுகிறது.

விதையுறைகள் பழுது, நாற்றுகளின் மேல் பகுதி அல்லது நாற்று முழுவதிலும் உள்ள குழிகள், பிளவுகள், வெடிப்புகள், பூச்சி தாக்குதலுக்குள்ளாவதால் ஏற்படும் காயங்கள், வித்திலைகள் மற்றும் நுனி மொட்டு பாதிப்படைதல், நாற்றுகளின் முக்கிய பாகங்களானவோ, தண்டு, நுனிமொட்டு ஆகியவை வலுவற்றும், சரியான நீள் விகிதத்தில் இல்லாமல் இருத்தல், வேர் நன்றாக வளர்ந்து தண்டு பகுதி வளர்ச்சி குறைந்தும் காணப்படுதல், முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை வேர் வளர்ச்சி குறைந்து காணப்படுதல் போன்றவை வலுவற்ற நாற்றுகள் என அழைக்கப்படுகிறது.

வலுவற்ற நாற்றுகள் உருவாக சில காரணங்கள் உள்ளன. முதிர்ச்சியற்ற விதைகளை விதைப்புக்கு பயன்படுத்துதல் முறையாக விதைகளை சேமித்து பயன்படுத்தாமை, விதையினை சேமிக்கும் போது அல்லது பயன்படுத்தும் போதோ முக்கிய பாகங்களான விதையின் கரு உணவு முதலியன பாதிக்கப்படுவதாலும், விதையானது பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு ஆளாவதாலும், இயந்திரங்களை பயன்படுத்தி விதைகளை அறுவடை செய்தல், தூற்றுதல், தூய்மைப்படுத்துதல், விதைகளை ஒரிடத்திலிருந்து வேறிடத்திற்கு கொண்டு செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதாலும், பூச்சி நோய் தாக்கத்திற்கு உள்ளாகும் விதைகளை பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொண்டு அழிக்கும் போதும் இது போன்று விதைகள் பாதிப்படைந்து வலுவற்ற நாற்றுக்களை உருவாக்குகிறது.

எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் பெறவும் விதை இடுபொருள் செலவினைக் குறைக்கவும், தங்களிடம் உள்ள விதைகளை கரூர் காந்தி கிராமம், திண்ணப்பா நகரிலுள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து வலுவான மற்றும் வலுவற்ற விதைகள், உயிரற்ற விதைகள் எவ்வளவு உள்ளது என அறிந்து விதைக்கவும், அறுவடை செய்த விதையினை அடுத்த விதைப்புக்கு சேமிக்கும் பட்சத்தில் உரிய முறையில் சேதமில்லாமல் அறுவடை செய்து, விதையின் ஈரப்பதம் அறிந்து கொண்டு, விதைகள் பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் சேமிக்குமாறு கரூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சி.பத்மா மற்றும் வேளாண் அலுவலர் அ.அபர்ணா ஆகியோர் தெரிவித்தனர்.

Spread the love