June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற நல் விதைகள் அவசியம்

நல்ல லாபகரமான வேளாண்மைக்கு நல் விதை, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியன முக்கியமாகும். இதில் நல் விதை எனப்படுவது விதைச்சான்று துறையால் சான்றளிக்கப்பட்டு கீழ்காணும் அனைத்து குணங்களையும் கொண்டிருக்கும்

  1. இரகங்களின் பாரம்பரிய குணங்களை கொண்டிருக்கும்.
  2. அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்டிருக்கும்.
  3. பிற இரகங்கள் மற்றும் களைச் செடிகளின் விதைகள் இல்லாது இருக்கும்.
  4. பூச்சி நோய் தாக்கம் இல்லாமல் இருக்கும்.
  5. மண் மற்றும் செடிகளின் பாகங்கள் இல்லாமல் இருக்கும்.

சான்று பெற்ற விதைகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனில்

  1. வல்லுநர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது) மற்றும் ஆதார நிலை விதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து விவசாயிகளின் வயலில் உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது.
  2. பயிர் விதைத்த 35 நாட்கள் அல்லது பூக்கும் தருணத்திற்கு 15 நாட்கள் முன்னதாக விதை சான்றளிப்புத் துறையில் விதைப்பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது.
  3. பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவலரால் வயலில் விதை தரம் குறித்து வயலாய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராகும்.
  4. விதைப்பண்ணையிலிருந்து விதை கொள்முதல் செய்யப்பட்டு உரிமம் பெறப்பட்ட விதை சுத்தி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
  5. விதை சுத்தி நிலையத்தில் சுத்திப்பணி மேற்கொள்ளப்பட்டு சுத்தமான ஓரே மாதிரியான சுத்தி விதைகள் பிரிக்கப்படுகின்றன.
  6. சுத்திகரிக்கப்பட்ட விதை குவியலில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
  7. பகுப்பாய்வில் தேறிய விதை குவியலுக்கு சான்றட்டைகள் பொருத்தப்படுகிறது

சான்று பெற்ற விதைகளில் ஆதாரநிலை விதைகளுக்கு வெள்ளை நிற அட்டையும், சான்று நிலை விதைகளுக்கு நீலநிற அட்டையும் பொருத்தப்படுகிறது. ஆதரா நிலை விதைகள் 99 சதவீதம் இனத்தூய்மை கொண்டவையாகவும், சான்று நிலை விதைகள் 98 சதவீதம் இனத்தூய்மை கொண்டவையாகவும் இருக்கும். சான்று பெற்ற விதைகள் அதிக புறச்சுத்தம், பிற ரக கலவன் இல்லாமை மற்றும் அளவான ஈரப்பதம் கொண்டிருக்கும். எனவே, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால், நல்ல முளைப்புத் திறன், சீரான பயிர் வளர்ச்சி, ஒரே நேரத்தில் அறுவடை மற்றும் கலப்படமில்லாத அதிக மகசூலை பெறலாம் என திண்டுக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ம.ச.சந்திரமாலா தெரிவித்துள்ளார்.

Spread the love