August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் மேலும் உயர்வு

தங்கம் இருப்பு மதிப்பு அபரிமித உயர்வு

செய்திப்பிரிவு

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பானது மே 7ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் மேலும் உயர்ந்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில் தங்கம் இருப்பு மதிப்பு அதிகரித்ததை அடுத்து அன்னியச் செலாவணி மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர்ச்சியாக 5 வாரமாக உயர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பானது 23 வாரங்கள் தொடர்ச்சியான உயர்வுக்குப் பின்பு மார்ச் 13ம் தேதி மற்றும் 20ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில் 17 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு படிப்படியாக மீண்டும் உயர்வு கண்டு 590 பில்லியன் டாலரைக் கடந்தது. அதன்பின்பு மீண்டும் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த மே 7ம் தேதியுடன் முடிவடைந்த கணக்கீட்டு வாரத்தில் நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 1.444 பில்லியன் டாலர் உயர்ந்து 589.465 பில்லியன் டாலராக உள்ளது.

முந்தைய ஏப்.30ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 588.020 பில்லியன் டாலராகவும், ஏப்.23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 584.1 பில்லியன் டாலராகவும் இருந்தது.

முந்தைய ஏப்.2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 576.86 பில்லியன் டாலராகவும் இருந்தது.

முந்தைய மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 579.82 பில்லியன் டாலராகவும், மார்ச் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 580.29 பில்லியன் டாலராகவும் இருந்தது.

முந்தைய பிப்.26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 584.55 பில்லியன் டாலராகவும், ஜன.29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 590.18 பில்லியன் டாலராகவும் இருந்தது.

ஒட்டு மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் பெரிய அளவிலான பங்கு வகிக்கும் அன்னிய நாணயச் சொத்து மதிப்பானது கணக்கீட்டு வாரத்தில் 434 மில்லியன் டாலர் உயர்ந்து 546.493 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. எனினும் டாலர் தவிர்த்த இதர நாணய மதிப்பிலான தொகைகள், பங்குகள் மற்றும் பத்திரங்களின் மதிப்பு, மொத்த சொத்து மதிப்பில் 20-30 சதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

கடந்த மே 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு மதிப்பு 1.016 பில்லியன் டாலர் உயர்ந்து 36.48 பில்லியன் டாலராக உள்ளது.

கணக்கீட்டு வாரத்தில் இந்தியாவின் சிறப்பு எடுப்பு உரிமமானது 4 மில்லியன் டாலர் குறைந்து 1.503 பில்லியன் டாலராகவும், மேலும் சர்வதேச நிதியத்தில் உள்ள காப்பு நிதி 1 மில்லியன் டாலர் குறைந்து 4.989 பில்லியன் டாலராகவும் உள்ளது.

கோவிட் பெருந்தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ச்சியாக உயர்வு கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் கையிருப்பு மதிப்பு மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் இருப்பும் அதிகரித்தே வருகிறது.

Spread the love