August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அப்பாட் இந்தியா நிகர லாபம் இறுதி காலாண்டில் 37% அதிகரிப்பு

புது தில்லி

மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அப்பாட் இந்தியாவின் லாபம் இறுதிக் காலாண்டில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021 மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது மற்றும் இறுதிக் காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.152.47 கோடியை ஈட்டியுள்ளது. இது, 2020-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.110.97 கோடியுடன் ஒப்பிடும்போது 37.39 சதவீதம் அதிகமாகும்.

இந்த நிறுவனம் மருந்துகள் விற்பனை வாயிலாக ஈட்டிய வருவாய் ரூ.961.20 கோடியிலிருந்து ரூ.1,095.94 கோடியாக உயா்ந்துள்ளது.

நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் நிறுவனத்துக்கு கிடைத்த நிகர லாபம் முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் ரூ.592.93 கோடியிலிருந்து ரூ.690.69 கோடியாக அதிகரித்துள்ளது.

அதேவேளையில், இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.4,093.14 கோடியிலிருந்து ரூ.4,310.02 கோடியாக உயா்ந்துள்ளது.

மார்ச் 31, 2021 உடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒவ்வொன்றுக்கும் சிறப்பு ஈவுத்தொகையாக ரூ.155-ம், இறுதி ஈவுத் தொகையாக ரூ.120-ம் வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாறு அப்பாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love