புது தில்லி, மே 19
மைகோர்மைகாஸிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் அம்ஃபோடெரிசின்-பி என்ற மருந்தின் தேவை மற்றும் விநியோக நிலை குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இன்று ஆய்வு செய்தார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு, உற்பத்தியாளர்களுடன் மத்திய அரசு ஓர் உத்தியை வகுத்துள்ளதுடன், உலகம் முழுவதிலும் இருந்து இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
அம்ஃபோடெரிசின்-பி மருந்தின் விநியோகம் பல மடங்கு உயர்ந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், தற்போது திடீரென இந்த மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. தேவை இருக்கும் நோயாளிகளுக்கு இந்தக் குறிப்பிட்ட மருந்தை வழங்குவதற்காக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் உறுதியளித்தார்.
அம்ஃபோடெரிசின்-பி மருந்தை முறையாக வழங்கவும், விநியோக சங்கிலி மேலாண்மையை மேம்படுத்தவும் அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. மருந்தின் பற்றாக்குறை மிக விரைவில் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, மாநிலங்கள் நேர்மையான வழியில் இந்த மருந்தைப் பயன்படுத்துமாறு மாண்டவியா கோரிக்கை விடுத்துள்ளார்.