January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அரசு மையத்தில் நெல் கொள்முதல் தீவிரம்

கோவை, ஏப்.26

ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், நெல் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதுவரை அரசு கொள்முதல் நிலையத்தில், 478 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, இரண்டு போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி நடக்கிறது. ஒரு போகத்தில் மட்டுமே, 6,400 ஏக்கர் வரையில் சாகுபடி நடக்கிறது. இரண்டாம் போகத்தில் விவசாயிகள், 1,200 ஏக்கரில், டிசம்பர் துவக்கத்தில் சன்ன ரகம் மற்றும் குண்டு ரக நெல் சாகுபடி செய்தனர். தற்போது, நெல் அறுவடை பருவத்தை அடைந்துள்ளதால், இந்த மாதம் துவக்கத்தில் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விவசாயிகளின் நலனுக்காக, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, 478 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக கடந்த, 1ம் தேதி முதல் ஆனைமலையில் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை, 449 டன் சன்ன ரகம், 29 டன் குண்டு ரகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் முதல் இதுவரை இரண்டு போகமும் சேர்த்து, 2,075 டன் சன்ன ரகம், 212 டன் குண்டு ரகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அரசு, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ.1,905, பொது ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ.1,865 நிர்ணயித்துள்ளது. அரசு கொள்முதல் விலையை, ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும். தற்போது, கோட்டூர், கம்பாலபட்டி, ரமணமுதலிபுதுார், பொன்னாலம்மன்துறை பகுதி விவசாயிகள், அதிக வாடகை செலுத்தி ஆனைமலைக்கு நெல் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் நலனுக்காக கோட்டூர் பகுதியில், மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும் என தெரிவித்தனர்.

Spread the love