விருதுநகர், ஜூன் 1
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு மற்றும் விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 11-வது தவணையாக ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சியை பாரத பிரதமர் இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் துவங்கி வைத்தார். காணொலி கண்காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியை வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை உதவிப்பேராசிரியர் ஆ.சுமித்ரா தொகுத்து வழங்கினார். முனைவர் ஜெ.ராம்குமார் உதவிப்பேராசிரியர், வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கோ.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். பா.ராதாகிருஷ்ணன், தோட்டக்கலை துணை இயக்குனர், தலைமை தாங்கி அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பற்றி எடுத்துக்கூறி தலைமை உரை ஆற்றினார். வேளாண்மை அலுவலர் மூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மற்றும் மாவட்ட வளர்ச்சி மேலாளர், நபார்டு ராஜசுரேஷ்வரன், கிசான் கடன் அட்டை பெறுதல் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை பற்றி வாழ்த்துறையில் எடுத்து கூறினார். இவ்விழாவில் கோபாலபுரம் மற்றும் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்கள் திரவியம், பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். மேலும், இவ்விழாவில் முனைவர் ஜெ.ராம்குமார், உதவி பேராசிரியர் வேளாண்மை உற்பத்தியில் தேனீக்களின் பங்கு பற்றி தெளிவாக எடுத்து கூறினார். உதவிப் பேராசிரியர் முனைவர் ப.வேணுதேவன், பயறுவகை விதை உற்பத்தி தொழில்நுட்பத்தை பற்றி எடுத்து கூறினார். முனைவர் ஆ.விஜயகுமார் அறுவடை பின்சார் தொழில்நுட்ப உரையாற்றினார். மேலும் முனைவர் நா.சா.சுடர் மணியன் மானாவாரி பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க வானிலை முன்னறிவிப்பு தகவலின் அடிப்படையில் விவசாயம் செய்வதைப் பற்றி விளக்க உரை ஆற்றினார். உதவிப் பேராசிரியர் முனைவர் மா.ஞானசேகரன் மானாவாரி பயிர்களில் புதிய கலப்பின ரகங்களை பற்றி எடுத்துரைத்ததை தொடர்ந்து நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
Spread the love