ஏற்றுமதியாகும் மூலிகை பயிர்களில் அவுரியும் ஒன்று. இதன் அறிவியல் பெயர் இன்டிகோ ஃபேராடிங்டோரியா என அழைக்கப்படுகிறது. இது பேபேசி தாவர குடும்பத்தை சார்ந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மானாவாரி பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. எல்லா வகையான மண்ணிலும் பயிரிடப்படும் மருத்துவ தாவரம் தான் அவுரி. இலை, பூ, காய்கள், விதைகள், ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புள்ளது. வெளிநாடுகளுக்கு எற்றுமதியாவதால் அதிக அளவாக அன்னிய செலாவணி கிடைக்கும் தாவரம் தான் அவுரி.
சாகுபடி விபரங்கள்
ஏக்கருக்கு 7 முதல் 10 கிலோ விதை தேவை. ஆடி முதல் உழது கொண்டே விதைக்கலாம். 7 முதல் 10 நாட்களில் முளைப்பு எடுத்து விடும். 35வது நாளில் களை எடுக்க வேண்டும். பூச்சி, நோய் தாக்குதல் குறைவு. ஆடு, மாடு உண்ணாது. 70 முதல் 75 நாட்களில் 3-4 அடி உயரம் வளரும். 120 நாட்களுக்கு மேல் இலைகளை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி ஈரப்பதம் குறைந்த பின் விற்பனை செய்யலாம். தனியாக பயிரிடாமல், பலர் பயிரிட்டால் விற்பனை செய்ய எளிதாகும். ஒரு சில வியாபாரிகள் மட்டுமே இதனை கொள்முதல் செய்து தூத்துக்குடி மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஒரு எக்கரில் இலையாக 400 முதல் 600 கிலோ கிடைக்கும். விதைகள் ஒரு ஏக்கரில் 100 முதல் 125 கிலோ மகசூல் கிடைக்கும். ஒப்பந்த சாகுபடி முறையில் சில இடங்களில் தொகுப்பாக செய்யப்படுகிறது. இதன் சாகுபடியை ஊக்குவிக்க தோட்டக்கலை துறையினர் மானிய உதவி தருகின்றனர்.