May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆசிய பணக்காரர்கள் பட்டியல் இரண்டாவது இடம் பிடித்தார் அதானி

உலக அளவில் பொருளாதார சக்தியாக முன்னேறி வரும் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் கவுதம் அதானி.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி கடந்த 2 வருடமாக தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவதுடன் புதிய துறைகளிலும் தடம் பதித்துள்ளார்.

இதன் வாயிலாகப் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அதானி கிரீன் பங்குகள் மட்டும் கடந்த வருடத்தில் 370 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் எஸ்பி எனர்ஜி நிறுவனத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விமான நிலையம், சோலார், துறைமுக வர்த்தகம் விரிவாக்கம் என பல துறையிகளில் அதானி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளன. இதன் மூலம் இவரின் சொத்து மதிப்பு குறுகிய காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 66.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதையடுத்து சீனாவின் பெரும் பணக்காரரான ஜோங் சான்சான்-ஐ பின்னுக்குத்தள்ளி ஆசியாவின் 2வது பெரும் பணக்காரர் ஆக மாறியுள்ளார் அதானி. அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 33.8 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 66.5 பில்லியன் டாலராக எகிறி உள்ளது.

சீன பணக்காரர்கள் பட்டியலில் அலிபாபா நிறுவனர் ஜாக்மா நீண்டகாலம் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் சீன அரசின் தடை காரணமாக அவரின் சொத்து மதிப்பு பெரிய அளவில் குறைந்தது. இதனால் தண்ணீர் பாட்டில் மற்றும் பார்மா நிறுவனங்களின் தலைவரான ஜோங் சான்சான் 63.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் 2வது பணக்காரராகவும், சீனாவில் டாப் பணக்காரர் ஆகவும் இருந்தார்.

தற்போது ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியும், 2வது இடத்தில் கவுதம் அதானியும் உள்ளனர். இருவருமே இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love