புது தில்லி, டிச.24
லக்னோ-வில் அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் காலணிகள் மற்றும் ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரியை மறு சீரமைப்புச் செய்து 12 சதமாக உயர்த்தப்பட்டது.
மேலும், ஆடை மற்றும் காலணிகள் துறை சார்ந்தோர் மத்திய அரசிடம் அதிக இணக்கச் செலவுகள், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்குக் கூடுதல் சுமை மற்றும் ஏழை மக்களுக்கு ஆடை மற்றும் காலணிகள் வாங்க முடியாத நிலையில் ஏற்படும் எனப் பல கோரிக்கையை வைக்கப்பட்டும் ஜிஎஸ்டி கவுன்சில் இதன் மீதான வரியை உயர்த்தியது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி உயர்த்துவது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வருகிற ஜனவரி 1 முதல் புதிய வரி விதிப்புகள் நடைமுறைக்கு வர உள்ளது.
இதன் மூலம் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒரு ஆடையின் விற்பனை விலை ரூ.1000க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அதற்கு ஜிஎஸ்டி வரி 12 சதமாக உயர்த்தப்பட உள்ளது, இதற்கு முன்பு இதன் அளவு வெறும் 5 சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ரூ.1000க்கு குறைவான காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதத்தில் இருந்து 12 சதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனால் ஆடை மற்றும் காலணி வர்த்தகம் நடுத்தர மக்கள் மத்தியில் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது உற்பத்தி செலவுகளும் அதிகமாகியுள்ள வேளையில் உற்பத்தி நிறுவனங்களும் தயாரிப்பு பொருட்களின் விலையைக் குறைத்து ஜிஎஸ்டி வரி உயர் ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இந்த வரி உயர்வு குறித்து எதிர்ப்புக் கிளம்பினால் ஜிஎஸ்டி கவுன்சில் தனது முடிவில் இருந்து பின் வாங்க வாய்ப்பு உள்ளது.