August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீர் பெற முயற்சி

சென்னை, மே 6

ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு, 4 டி.எம்.சி., கிருஷ்ணா நீரைப் பெற, பொதுப்பணித் துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்திற்கு ஆண்டு தோறும் கண்டலேறு அணையில் இருந்து, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, சாய் கங்கை கால்வாயில், ஆந்திர அரசு திறக்க வேண்டும். இந்த நீரை வைத்து, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர் மாவட்ட ஏரிகளில், 8.14 டி.எம்.சி., இருப்பு உள்ளது. கத்திரி வெயில் காலம் துவங்கி உள்ளதாலும், சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவை அதிகரித்துள்ளதாலும், ஏரிகளில் நீர் இருப்பு குறைய வாய்ப்புள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திராவிடம் இருந்து முறைப்படி, 4 டி.எம்.சி., நீரை பெற்று பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தேக்கி வைக்கும்படி, சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர நீர் வளத்துறை அதிகாரிகளிடம், தமிழகத்திற்கான நீரை பெற, பொதுப்பணித் துறை அதிகாரிகள், பேச்சு நடத்த துவங்கியுள்ளனர்.

புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதும், நீரை திறந்து விடுமாறு, ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதப்பட உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பேற்புக்காக இத்துறையினர் காத்திருக்கின்றனர்.

Spread the love