July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆன்லைன் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை மத்திய அரசு தடை விதிக்கக் கூடாது: ஆய்வு தகவல்

புது தில்லி, ஜூலை 22

மின்னணு வர்த்தக நிறுவனங்களின் அதிகளவிலான தள்ளுபடி விற்பனைகளுக்கு, மத்திய அரசு தடை விதிக்கக்கூடாது என, 72 சத ஆன்லைன் நுகர்வோர்கள், கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டிலுள்ள, 394 மாவட்டங்களில், 82 ஆயிரம் பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் வாயிலான வர்த்தகம், இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 12 மாதங்களில், ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை, 49 சதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், பாதுகாப்பானதாகவும், சவுகரியமானதாகவும், விலை குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவது தான் என தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆய்வில் பங்கேற்றவர்களில் 72 சதம் பேர், மின்னணு வர்த்தக நிறுவனங்களின் விற்பனைகளை தடை செய்வது, கட்டுப்படுத்துவது, தலையிடுவது போன்றவற்றில் மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதற்கு இவர்கள், தற்போதைய சிக்கலான சூழலில், சகாய விலையில் பொருட்களை வாங்க முடிவதால், பணத்தை சேமிக்க முடிகிறது என்பதை காரணமாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில், மத்திய அரசு, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் சிறப்பு தள்ளுபடி உள்ளிட்ட, பிளாஷ் விற்பனைகளை தடை செய்வது குறித்த வரைவு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், நுகர்வோர் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love