June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆலோசனை குழு கூட்டத்தில் பயிறு சாகுபடிக்கு விழிப்புணர்வு

சிவகங்கை, ஏப்.29

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் 12.4.22 அன்று நடத்தப்பட்டது. சாக்கோட்டை வட்டாரத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் ந.சண்முக ஜெயந்தி தலைமையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் 25 ஆலோசனை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அட்மா திட்டத்தில் தற்பொழுது வழங்கப்பட்ட இரண்டாம் தவணை நிதிக்கு ஆலோசனை குழு உறுப்பினர்கள் மத்தியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை மற்றும் வேளாண் வணிகத்துறைகளிலிருந்து அலுவலர்கள் கலந்து கொண்டு வழங்கப்பட்ட திட்ட இலக்கீடு அதனை செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குநர் ந.சண்முக ஜெயந்தி, தனது தலைமையுரையில் நடப்பாண்டு பயிறு உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் சாக்கோட்டை வட்டாரத்தில் பல கிராமங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது. பயிறு வகை பயிர்களான உளுந்து, பச்சை பயிறு மற்றும் தட்டை பயிறு ஆகியனவற்றை தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் வரப்பு ஓரங்களிலும் பயிரிட்டு பயிறு உற்பத்தியை பெருக்க வேண்டும். ஏனென்றால் நமது நாடு தற்போது உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தாலும் பயிறு உற்பத்தியில் பின்தங்கிய நிலையில் உளளது. இதனால் நாம் நமது தேவைக்கு பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து வருகின்றோம். மேலும் நமது அன்றாட உணவு வகைகளில் பருப்பு போன்ற பயிறு வகைகளை அதிகம் பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் நமது தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆதனால் நாம் பயிறு வகை பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்று கூறினார்.

மேலும் சாக்கோட்டை வட்டாரத்தில் அனைத்து விவசாயிகளும் புரட்டாசி பட்டத்தில் மழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பு செய்து கொண்டிருக்கின்றார்கள். நெற் பயிர் முளைத்து வெளிவரும் தருணம் வரப்பு ஓரங்களில் ஏதாவது ஒரு பயிறு வகை பயிர்களை அடிக்கு இரண்டு விதை வீதம் ஊன்றினால் நம் வீட்டிற்கு தேவையான பயிற்றை நாமே உற்பத்தி செய்வதுடன் நெற் பயிரை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை எளிதாக கட்டுப்படுத்தலாம். வரப்பு பயிராக ஒரு ஏக்கர் நிலத்தில் பயிறு சாகுபடி செய்ய 800 கிராம் விதை போதுமானது. இதற்கு தனியாக உரம் பூச்சி மருந்து என எந்தவித இடுபொருட்களும் தேவையில்லை. அதனால் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் வரப்பு ஓரங்களில் ஏதாவது ஒரு பயிறு வகை பயிரை நடவு செய்து உற்பத்தியை பெருக்குமாறு வேளாண்மை உதவி இயக்குநர் தனது உரையில் கேட்டுக்கொண்டார். மேலும் தற்பொழுது நெல் அறுவடை செய்த விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசாக வைத்திருக்காமல் கோடை உழவு செய்ய வேண்டியது அவசியமென்றும், ஆடி பட்டத்தில் (ஜீன் – ஜீலை மாதங்களில்) நமக்கு கிடைக்கும் தென்மேற்கு பருவ மழையை பயன்படுத்தி பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்து உற்பத்தியை பெருக்கவேண்டும். பயிறு சாகுபடியின் உர தேவைக்கு மண் பகுப்பாய்வு முடிவின்படி இடவேண்டும். அல்லது பொது பரிந்துரைப்படி ஒரு ஏக்கர் நிலத்தில் கடைசி உழவிற்கு முன்பு 11 கிலோ யூரியா 63 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். 2 கிலோ பயிறு நுண்ணுரத்தை ஊட்டமேற்றி இடவேண்டும். அதாவது ஒரு மாதத்திற்கு முன்பு 2 கிலோ பயிறு நுண்ணுரத்தை 20 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் நன்கு கலந்து காற்று புகாவண்ணம் மூடி நிழலில் வைத்திருந்து ஊட்டமேற்றி பயன்படுத்த வேண்டும்.
தனிப்பயிராக சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு 8 கிலோ விதையை எடுத்துக்கொண்டு ரைசோபியம் 200 கிராம் பாஸ்போபாக்டீரியா 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மாவிரிடி 32 கிராம் ஆகியவற்றுடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைத்த 3-ம் நாளில் பென்டிமிதாலின் என்ற களைகொல்லியை 400 மி.லி எடுத்துக்கொண்டு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். விதைத்த 20-ம் நாளில் கைக்களை மூலம் களைகளைகட்டுப்படுத்தலாம். அதிக மகசூல் எடுப்பதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ சிங்சல்பேட் இட வேண்டியது அவசியமாகிறது. மேலும் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்யும் போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்பட்ட பயிறு ஒன்டர் 2 கிலோ எடுத்துக்கொண்டு 200 லிட்டர் நீரில் கலந்து இலைவழியாக தெளிக்க வேண்டும். அல்லது 4 கிலோ டிஏபி எடுத்துக்கொண்டு 200 லிட்டர் நீரில் கலந்து இலைவழியாக தெளிக்க வேண்டும். பூக்கள் வெளிவரும் பருவத்திலும் 20 நாள் பின்பும் இருமுறை டிஏபி தெளித்து திரட்சியான காய்களை உருவாக்கி அதிகமகசூல் பெறலாம். ஆடிபட்டத்தில் வறட்சி காணப்படும் சூழ்நிலைகளில் பயிறு வகை பயிர்கள் வறட்சியை தாங்கி வளர 2 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடும் 100 PPஆபோரிக் அமிலமும் கலந்த 200 லிட்டர் கரைசலை தெளித்து வறட்சியைக் கட்டுப்படுத்தலாம் என்றுரைத்தார்.

வேளாண்மை உதவி இயக்குநர் உரைக்குப்பின்பு துணை வேளாண்மை அலுவலர் மு.சரவணன் பயிறுகளின் பதிய இரகங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். வம்பன்-6, வம்பன்-9 மற்றும் ஆடுதுறை-6 போன்ற உளுந்து இரகங்கள்;நெல் தரிசில் பயிரிட ஏற்றவைகள். ஆடி பட்டத்திற்கு வம்பன்-6, வம்பன்-8, போன்ற உளுந்து இரகங்கள் நம் மாவட்டத்திற்கு ஏற்ற இரகங்களாகும். 65-70 நாட்கள் வயதுடைய இந்த உளுந்து இரகங்கள் மஞ்சள் தேமல் வைரஸ், இலைசுருங்கல் மற்றும் சாம்பல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. மேலும் மானாவாரியில் சராசரியாக ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் கொடுக்கிறது. பாசிப்பயிறில் நமக்கு ஏற்ற இரகங்கள் வம்பன்-4 மற்றும் கோயம்புத்தூர்-8 போன்ற இரகங்களாகும். 55-60 நாட்கள் வயதுடைய இந்த இரகங்கள் மஞ்சள் தேமல் வைரஸ் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. தட்டைப்பயறில் வம்பன்-3 மற்றும் கோயம்புத்தூர்-7 போன்ற இரகங்கள் மிகச்சிறந்த இரகங்கள். இவை நெல்லில் வரப்பு பயிராக பயிரிட ஏற்றவை. விதைகள்; உயிர் உரங்கள்; நுண்ணுரங்கள் மற்றும் தொழில்நுட்ப தகவல்களுக்கு சாக்கோட்டை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையை தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டார்.

வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டத்திற்கு தொழில்நுட்ப மேலாளர்களான இரா.தமிழ்ச்செல்வி எஸ்தர், ம.விஜய் ஆனந்த் மற்றும் க.கனிமொழி ஆகியோர் முன் ஏற்பாடு செய்திருந்தனர்.

Spread the love