சிவகங்கை, ஜூன் 22
தென்னை மரம் ஒரு கடின மின்சாரக் கடத்தி என்றாலும் இடி, மின்னல் தாக்குவதால் பச்சை மரத்தில் மின்சாரம் பாய்ந்து மரம் எரிந்து கரிந்து போய்விடும். இதனால் இலைகள் மற்றும் காய்கள் உதிர்ந்து கொட்டி விடும்.
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர், வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, தென்னை மரங்களை இடி, மின்னலில் இருந்து பாதுகாக்கும் முறைகள் பற்றி விளக்கமளித்தார். அவர் கூறியதாவது, தென்னை மரத்தைத் தாக்கிய மின்னலினால் ஏற்படும் மின்சாரம் தூர் மற்றும் எல்லா வேர்களையும் பாதிப்பதால் மண்ணின் அடியில் வேர்களின் சேதம் மிக அதிகமாக
காணப்படுகின்றது. நேரடியாக மின்னல் தாக்கப்பட்ட மரத்தை பொறுத்தவரையிலும் மின்சாரமானது கொண்டையிலிருந்து தூர் வழியாக இறக்கி வேர்களின் வழியாக நாலாப்புறமும் மண்ணினுள் பரவுகின்றது. அதே நேரத்தில் பக்கவாட்டிலுள்ள சுமார் 6 முதல் 8 மரங்களுடைய வேர்களும் மண்ணினுள் ஒன்றுடன் ஒன்று தொட்டு இணைந்து காணப்படுவதால் மின்சாரம் பாய்வதன் விளைவு அவற்றிற்கும் ஏற்படுகின்றது. ஆகவே பக்கவாட்டில் நிற்கின்ற பல மரங்களும் பாதிக்கப்பட்டு சிறிது காலத்திற்கு பின்னர் மடிந்து விடுகின்றன. மேலும் தாக்கபட்ட தண்டு பகுதியினால் வேர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறது. அதன் மூலம் மகசூல் குறைந்து காணப்படும்.
பாதிக்கப்பட்ட மரங்களைப் பராமரித்தல்
குறைந்த அளவு மின் ஆபத்தால் பாதிக்கப்பட்ட மரங்களை முறைப்படி பராமரித்துக் காப்பாற்ற முடியும். இது பொன்ற மரங்களில் காணப்படும் வேர்ப்பகுதிகளின் வழியாக தீமை தரும் பாக்டீரியர் நுழைந்து நோயை உண்டு பண்ணலாம். ஆகவே வேர்பகுதிகளில் பொர்டொ பசையைப் பூசுவதால் நுண் கிருமிகள் மரங்களைத் தாக்காமல் தடுக்கலாம். பொர்டொ பசை தயாரிக்க இரு நூறு (200) கிராம் தாமிர சல்பெட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பின்பு வேறு பாத்திரத்தில் 200 கிராம் சுண்ணாம்பு ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும்.