புது தில்லி, ஏப்.24
கடந்த நிதியாண்டில் இந்தியன் வங்கியின் ஒரு அங்கமான இண்ட்பேங்க் மெர்ச்சண்ட் பேங்கிங் சர்வீசஸ் நிறுவனம் 107 சத நிகரலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இண்ட்பேங்க் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பாவது:
கடந்த 2020-21ம் நிதியாண்டில் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.1,201.15 கோடியாக இருந்தது. இது, 2019-20ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானம் ரூ.877.17 கோடியுடன் ஒப்பிடுகையில் 36.93 சதம் அதிகமாகும். செயல்பாட்டு லாபம் ரூ.160.39 கோடியிலிருந்து 115.37 சதம் உயர்ந்து ரூ.345.43 கோடியானது.
மேலும், நிகரலாபம் ரூ.197.28 கோடியிலிருந்து 106.52 சதம் உயர்ந்து ரூ.407.43 கோடியானது. கடந்த நிதியாண்டில் பங்கு ஒன்று வாயிலாக ஈட்டிய வருமானம் 95.74 சதம் அதிகரித்துள்ளது. 3,073 புதிய வர்த்தக மற்றும் டிபி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக இண்ட்பேங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.