புது தில்லி, மே 18
அமேசான் ப்ரைம் தளம் இந்தியாவில் தனது ஒரு மாத சந்தா திட்டத்தை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாக விளங்குவது அமேசான் ப்ரைம் வீடியோ. கோவிட் தொற்று ஊரடங்கினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 17.5 கோடியை எட்டியுள்ளது.
மேலும், உலக அளவில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட இரண்டாவது ஓடிடி தளம் இதுவாகும். 20 கோடி சந்தாதாரர்களைப் பெற்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அமேசான் ப்ரைம் தளம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத சந்தா, மூன்று மாத சந்தா, ஒரு வருட சந்தா என மூன்று விதமான சந்தாக்களை வழங்கி வந்தது.
இந்நிலையில் ஒரு மாத சந்தா திட்டத்தை இந்தியாவில் அமேசான் ப்ரைம் நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது. இத்துடன் இலவச ட்ரையல் திட்டத்தை நிறுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்கு கூடுதல் அங்கீகாரத்தை செயல்படுத்துமாறு ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் தனது இணையதளத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே இனி இந்தியாவில் அமேசான் ப்ரைம் சந்தாதாரராக சேர விரும்புவோர் ஒரு மாத சந்தாவில் சேர இயலாது என்றும், மூன்று மாத சந்தா அல்லது ஒரு வருட சந்தாவில் மட்டுமே சேர இயலும் என தெரிவித்துள்ளது.