புது தில்லி, மே 13
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய தொழிலக உற்பத்தியில் மார்ச் மாதத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: தொழில உற்பத்தி குறியீட்டில் தயாரிப்புத் துறையின் பங்களிப்பு 77.63 சதம் அளவுக்கு உள்ளது. இந்த துறையின் உற்பத்தி 2021 மார்ச் மாதத்தில் 25.8 சதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று சுரங்கத்துறையின் உற்பத்தி 6.1 சதமும், மின் துறையின் உற்பத்தி 22.5 சதமும் அதிகரித்துள்ளன.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் கோவிட் பேரிடரையடுத்து தொழில உற்பத்தி விகிதம் 18.7 சதம் சரிவைச் சந்தித்தது. இந்த எதிர்மறை நிலை 2020 ஆகஸ்ட் வரையில் நீடித்தது. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதையடுத்து, செப்டம்பர் மாதத்தில் தொழிலக உற்பத்தி 1 சதம் அதிகரித்தது. அக்டோபரில் இந்த வளர்ச்சி விகிதம் 4.5 சதமாக இருந்தது.
இந் நிலையில், 2020 நவம்பரில் தொழில உற்பத்தி 1.6 சதம் சரிந்து மீண்டும் எதிர்மறை நிலைக்கு சென்றது. 2020 டிசம்பரில் மறுபடியும் தொழில உற்பத்தி 2.2 சதமாக வளர்ச்சி கண்டது. இருப்பினும், நடப்பாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஐஐபி முன்னெப்போதும் இல்லாத வகையாக 0.9 சதம் மற்றும் 3.4 சமாக பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், இரண்டு மாத பின்னடைவுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 22.4 சதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. 2020-21 காலகட்டத்தில் ஐஐபி 8.6 சதவீதம் பின்னடைந்துள்ளது. இந்தப் பின்னடைவு 2019-20 நிதியாண்டு காலகட்டத்தில் 0.8 சதமாக இருந்தது என என்எஸ்ஓ புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.