September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை சாகுபடி மண்டலம் குறியீட்டைப் பெற்றது அந்தமான் நிகோபார்

புது தில்லி, ஏப்.30

அந்தமான் & நிகோபார் தீவுகளில் சுமார் 14,491 ஹெக்டேர் பரப்பை இயற்கை சாகுபடி ண்டலமாக மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது. அரசின் திட்டத்தில் முறைப்படி சான்றளிக்கப்பட்ட முதல் இயற்கை சாகுபடி பரப்பாக இந்தப் பகுதி உள்ளது.

அந்தமான் & நிகோபார் தீவுகளைத் தொடர்ந்து லட்சத்தீவு மற்றும் லடாக்கிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் பரப்புகளை இயற்கை வேளாண் சான்றளிக்கப்பட்ட பகுதிகளாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், வடகிழக்கு மாநிலங்கள், ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களின் பழங்குடியின பகுதிகள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவனப் பகுதிகளும் இயற்கை வேளாண் சான்றளிக்கப்பட்ட பகுதிகளாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் (PGS-India) கீழ், பெரு பரப்பு சான்றளிப்பு (LAC) திட்டத்தில் இயற்கைச் சான்று அளிக்கப்படுகிறது.

பாரம்பரிய இயற்கை சாகுபடிப் பரப்புகளை சான்றளிக்கப்பட்ட உற்பத்தி மையங்களாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக கார் நிகோபார் மற்றும் நான்கோவ்ரி தீவு தொகுதிகளில் உள்ள சுமார் 14,491 ஹெக்டேர் பரப்புக்கு இயற்கை விவசாய மண்டல சான்றளிக்கப்பட்டுள்ளது.

வேளாண் அமைச்சக அறிக்கையின் படி, குறிப்பிட்ட பகுதியில் எந்த அளவுக்கு இயற்கை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது என்பதை வல்லுனர் குழு ஒன்று உறுதி செய்து, பிஜிஎஸ்-இந்தியா திட்டத்தின் கீழ் அந்தப் பகுதிக்கு இயற்கை விவசாய மண்டல சான்றளிப்பு அளிப்பதற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் நிகோபார் மற்றும் நான்கோவ்ரி தீவுகள் பல நூற்றாண்டு காலமாக இயற்கை மண்டலமாக இருந்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சான்றளிக்கப்பட்ட பிராந்தியத்தில் நிலங்களை விற்பனை செய்வதோ, வாங்குவதோ, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரசாயன இடுபொருள்களை பயன்படுத்துவதோ சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான முயற்சிகளிலேயே, சில பாரம்பரிய மற்றும் தொடர் இயற்கை விவசாயப் பகுதிகளுக்கு உடனடியாக இயற்கை விவசாய மண்டல சான்றளிக்க முடியும் எனவும் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பிராந்தியங்களைக் கண்டறிவது, இயற்கை விவசாய சான்றளிக்கப்பட்ட பகுதிகளாக மாற்றுவது, குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமாக விளையும் பொருளை பிராண்ட் மற்றும் லேபிள் செய்வதன் வாயிலாக விளம்பரப்படுத்தி அந்தப் பகுதியை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து அமைச்சகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் (PKVY) கீழ், தனிநபர் விவசாயிகளை இயற்கை வேளாண் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்காக, சான்றிளிப்புத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி தனிநபர் விவசாயிகள் இயற்கை விளைபொருள் தேசியத் திட்டம் (NPOP) அல்லது பிஜிஎஸ் இந்தியா திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றளிப்பு முகமைகளுக்கு அளிக்கப்படும் தரப்படுத்துதல் கட்டணங்களை நேரடியாக திருப்பியளிப்பதன் வாயிலாக இந்த மானியம் அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love