January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை பூச்சி விரட்டிகள் தயார் செய்தல்

வேளாண்மை நமது நாட்டின் முதுகெலும்பாக கருத்தப்படுகிறது. பசுமைப் புரட்சிக்கு முன் நாட்டு இரகங்கள் மற்றும் இயற்கையான இடுபொருடகள் பயன்படுத்தி விவசாயம் செய்ததால் குறைந்த மகசூல் கிடைத்தது. இதன் காரணமாக 1966ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது பசுமைப் புரட்சி. இதன் முக்கிய நோக்கம் வேளாண் உற்பத்தியை இரசாயன உரங்கள், வீரிய ஒட்டு இரகங்கள், களைக்கொல்லி, பூஞ்சனக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி பெருக்குவதாகும். தொடர்ந்து இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டின் காரணமாக மண் மற்றும் சுற்றுசூழல் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. ஆதலால் செயற்கை பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டினை தவிர்த்து இயற்கை பூச்சி விரட்டினை பயன்படுத்தி நச்சு இல்லாத உணவு பொருட்களை உற்பத்தி செய்வோம் என்பது தற்போதைய நோக்கமாகும்.

கற்பூர கரைசல்

தேவையான பொருட்கள்:
• கோமியம்-1/2லி
• வேப்பெண்ணெய்-50மி.லி
• மஞ்சள்தூள்-10கி
• கற்பூரம்-5கி
• நிலகிரிதைலம்-5மி.லி
• சுண்ணாம்பு-10கி
• சீயக்காய்-10கி

செய்முறை:
• கட்டி கற்பூரத்தை நீலகிரி தைலத்துடன் சேர்த்து நன்கு கரைத்து நீர்ம நிலைக்கு மாற்ற வேண்டும் .
• சீயக்காய் பொடியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும். பின்பு இந்த கரைசலுடன் வெப்பெண்ணெய் சேர்க்க வேண்டும்.
• கோமியத்துடன் மஞ்சள்தூள், சுண்ணாம்பு, கற்பூர கரைசல் மற்றும் சீயக்காய் கரைசலுடன் சேர்க்கப்பட்ட வேப்பெண்ணெய் ஆகிய அனைத்தும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
• 15 மி.லி கற்பூர கரைசலை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.

குறிப்பு:
• கற்பூர கரைசலை தேவைப்படும்போது தயாரித்து பயன்படுத்த வேண்டும்.
• சேமித்து பயன்படுத்த கூடாது.

நன்மைகள்:
● சாறு உறிஞ்சும் பூச்சிகளை முழுவதும் கட்டுப்படுத்துகிறது.
● பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
● காய்துளைப்பான் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
● பயிர்களில் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
● பயருவகை மற்றும் பழப்பயிர்களில் சாம்பல் நோயை கட்டுப்படுத்துகிறது.
● இலை முடக்கு மற்றும் இலை சுருள் போன்ற வைரஸ் நோயின் தாக்கத்திலிருந்து பயிர்களை பாதுகாக்கிறது.

3ஜி கரைசல்

தேவையான பொருட்கள்:
• இஞ்சி-1 கிலோ,
• பூண்டு-1 கிலோ,
• பச்சை மிளகாய்-1கிலோ,
• காதி சோப்.

செய்முறை:
● இஞ்சி,பூண்டு மற்றும் பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கலவையக்க வேண்டும்.
● பின்பு இந்த கலவையுடன் 3 லிட்டர் தண்ணீர் மற்றும் கோமியம் கலந்து இரண்டு நாட்கள் வைக்க வேண்டும்.
● இரண்டு நாட்கள் கழித்து நாட்டு துணியால் பிழிந்து சாறு எடுக்க வேண்டும்.
● 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி 3ஜி கரைசல் மற்றும் 40மி.லி காதிசோப் கரைசல் கலந்து பயிர் மற்றும் செடிகளுக்கு தெளிக்கலாம்.

கட்டுப்படுத்தும் பூச்சிகள்:
மாவுப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, அசுவினி, காய் மற்றும் தண்டுதுளைப்பான்.

தகவல் : இரா.ஜெயசங்கர்மூர்த்தி, கோழிப்பட்டு, மு.செல்வம், நல்லநாயகபுரம்.

Spread the love