திருவள்ளூர், ஜூன் 13
திருவள்ளூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு அங்ககச்சான்றளிப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு அங்ககச்சான்றளிப்பு பெற்ற இயற்கை பண்ணைகளில் உயிர்வேலி அமைப்பதன் முக்கியத்துவம் பற்றி திருவள்ளூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் நா.ஜீவராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, உயிர்வேலி என்பது விளைநிலத்தை காக்கும் பொருட்டு உயிருள்ள மரங்கள் மற்றும் தாவரங்களால் வேலி அமைப்பதாகும். இந்த உயிர்வேலியானது இயற்கை பண்ணைகளுக்கு அருகாமையில் உள்ள பிற பண்ணைகளில் தெளிக்கக்கூடிய பூச்சி மருந்துகள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் பரவி இயற்கை பண்ணைகளில் படிவதை தடுக்கவும், மண் அரிப்பை தடுக்கவும், பல உயிர்களுக்கு உணவு கிடைக்கும் உணவுத்தொழிற்சாலையாகவும் விறகுக்காகவும் பசுந்தாள் உரத்திற்காகவும் பயன்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் பயிர்களுக்கு கெடுதல் உண்டாக்கும் பூச்சிகளை உண்ணும் பல்லி, ஓணான், எட்டுக்கால் பூச்சி போன்றவை வாழும் இடமாக அமைந்து பூச்சி மேலாண்மையில் பெரும் பங்காற்றுவதோடு பல்லுயிர் பரவலுக்கு உறுதுணையாக அமைகிறது. விவசாயிகள் அந்தந்த பகுதிக்கேற்ப கிளுவை முள், கள்ளிச்செடிகள், ஆமணக்கு போன்றவற்றை உயிர்வேலியாக பயன்படுத்தலாம். உயிர்வேலி அமைப்பதால் கம்பிவேலி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் செலவும் வெகுவாகக் குறையும்.
Spread the love