June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை விவசாயத்தில் நஞ்சில்லா இடுபொருள்கள்

இயற்கை வழி விவசாயத்தின் அடிப்படையே ஊட்டச்சத்து மிகுந்த மண்ணை உருவாக்குவது ஆகும். தொழு உரங்கள், பசுந்தாள் உரங்கள், மண் புழு உரம் போன்றவை மண்ணின் வளத்தை மேம்படுத்தும் முக்கிய காரணிகளாக திகழ்கிறது.
கோடை காலத்தின் இறுதியில் பருவ பயிருக்கு முந்தைய காலத்தில் கிடைக்கப் பெறும் இடைப்பட்ட காலத்தில் பசுந்தாள் உரப்பயிர்களோ பல தானியப் பயிர்களோ பயிரிட்டு அவை பூக்கும் முன்னர் மடக்கி உழுது அடுத்த பயிருக்கு உரமாக்குவது இயற்கை வேளாண்மையின் மிக சிறந்ததொரு தொழில் நுட்பமாகும். இயற்கை விவசாயத்தில் நாட்டு மாட்டின் சாணம் மற்றும் அவற்றின் கோமியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பசு மாட்டின் கோமியம், தாமிரம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் லாக்டோஸ் போன்ற சத்துக்களுக்கு மூலமாக அமைகிறது. இவற்றை கொண்டு தயாரிக்கின்ற பஞ்சகவ்யா, அக்கினி அஸ்த்திரா, பிரம்மாஸ்திரா போன்ற கரைசல்களை தெளிப்பதன் மூலம் செடிகளின் இலை மற்றும் வேர் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் அதிக மகசூலுக்கும் வழி வகுக்கின்றது.

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசட்டோபாக்டர் போன்றவை வழி மண்டலத்தில் உள்ள தழைச்சத்தின் மூலங்களை மண்ணில் நிலைநிறுத்தம் செய்கிறது. பாஸ்போபாக்டீரியா மண்ணில் கிடைக்காத நிலையிலுள்ள மணிச்சத்தினை பயிர்களுக்கு கிடைக்கும் நிலையில் மாற்றி கொடுக்கிறது. இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் தாரக மந்திரம் ”வருமுன் காப்போம்” என்பதாகும். வருமுன் காப்பது என்பது கோடை உழவு செய்வது முதல் பூச்சி நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களை பயிரிடுவது வரையில் பல்வேறு நடைமுறைகளை உள்ளடக்கியது ஆகும். பயிரை பாதுகாக்க வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பயிர்கள் குறிப்பாக அதிக தேன் மற்றும் மகரந்தம் உள்ள பூக்கள் கொண்ட பயிர்களை பயிரிடுவது நல்லது.

நெல் வரப்புகளில் பயிறு வகை பயிர்களான உளுந்து, தட்டை பயறு அல்லது சூரிய காந்தி போன்றவற்றை விதைக்கலாம். காய்கறி தோட்டங்களில் சுற்றிலும் ஓரப் பயிராக செண்டு பூ, எள், சூரியகாந்தி பயிர்களை விதைத்தும் நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்திழுக்கலாம். இவை பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கும். புதினா, பூண்டு, துளசி, நொச்சி போன்ற செடிகள் பூச்சி விரட்டி பயிர்களாக செயல்படுகிறது.

சாமந்தி பூக்கள், வண்டுகள் மற்றும் நூற்புழுக்களை விரட்டும் தன்மை கொண்டது. தடுப்பு பயிராக மக்காசோளம், துவரை பயிர்களை வரப்பு ஓரங்களில் பயிரிடுவதன் மூலம் வெள்ளை ஈ, மாவு பூச்சி, அசுவினி, தத்து பூச்சி போன்றவை ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு செல்வதை இப்பயிர்கள் தடுக்கின்றன. உயிரியல் முறைகளான ஊன் உண்ணிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் எதிர் நுண்ணுயிரிகள் மூலம் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம். பொறி வண்டுகள், கிரைசோபா போன்றவை சிறந்த ஊன் உண்ணிகளாகும். டிரைக்கோ டெர்மாவிரிடி, சூடோமோனஸ் புளுரசென்ஸ் போன்ற எதிர் பூஞ்சாணம், பாக்டீரியா பயிர் நோய்கனை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை விவசாயம் என்பது மண் மேல் தெரியும் தாவரத்தை சார்ந்தது மட்டும் அல்ல. அது மண்ணுக்குள் வினைபுரியும் கோடிக்கணக்கான உயிரினங்கள், இயற்கையுடன் இணைந்து மேற்கொள்ளும் செயல்களின் வெளிப்பாடாகும்.

எனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் நுண்ணுயிர்களை பெருக்கி அதன் மூலம் பயிரை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்துவோம். நஞ்சில்லா இடு பொருட்கள் பயன்படுத்தி மண் வளம் காப்போம். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஷீபா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Spread the love