June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை விவசாயத்தில் வேம்பின் மகத்துவம்

பொதுவாக பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே உழவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்தும்போது வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுவதோடு சுற்றுப்புறமும் மாசுபடுகிறது. இவற்றைத் தவிர்க்க உழவர்கள் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம். வேம்பின் அனைத்து பாகங்களும் உழவர்களுக்கு பயன்படுகின்றன. வேப்பிலையை உரமாகவும், பூச்சி மருந்தாகவும் பயன்படுத்தலாம். வேப்பங்கொட்டை கரைசலை பூச்சிக் கொல்லியாக பயன்படுத்தலாம். வேப்பிலையில் தழைச்சத்து 2.5 சதவீதம், மணிச்சத்து 0.6 சதவீதம், சாம்பல் சத்து 2.0 சதவீதம் எனும் அளவில் உள்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம். வேப்பிலை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு, மற்றும் நூற்புழுவின் தாக்குதல் வெகுவாக குறைந்து விடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைப்பதால் வண்டுகள், அந்துப்பூச்சிகள், துளைப்பான்கள் ஆகியவற்றின் தாக்குதல் குறையும்.

வேப்பங்கொட்டை கரைசலுக்கு 10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு பொடித்து தூளாக்கி 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மிலி அல்லது 100 கிராம் காதி பார் சோப்பு சேர்த்து நன்றாக கலந்து இக்கரைசலை கைத்தெளிப்பான் மூலம் தெளிப்பதால் பயிர்களில் தோன்றும் கம்பளிப்புழு, அசுவினி, தத்துப்பூச்சிகள், புகையான், இலைச் சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன், கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். 3 லிட்டர் வேப்பெண்ணையுடன் ஒட்டும் திரவம் 200 மிலி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து நன்றாக கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்து பயன்படுத்தலாம். பயிர்களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலானவற்றை கட்டுப்படுத்த வேப்பெண்ணைக் கரைசல் பயன்படும். வேப்பெண்ணை கரைசலை பயன்படுத்தும்போது நன்றாக கலக்கிய பின்பே பயன்படுத்துதல் வேண்டும். வேப்பிலை நொச்சிகரைசலுக்கு 5 கிலோ வேப்பிலையையும், 5 கிலோ நொச்சி இலையையும் அரைத்து வடிகட்டி அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு தெளிப்பதன்மூலம் இலைச்சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன், கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். வேம்பானது அசாடிராக்டின், நிம்பிசிடின் போன்ற வேதிப்பொருள்களை கொண்டுள்ளதால் பூச்சி நோய் தடுப்பாக பயன்படுகிறது. எவ்வித பாதிப்பும் இல்லாமல் வேம்பின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி பயிரிடும் பயிர்களை நோய்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதோடு, மட்டுமின்றி மண் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.சித்திரைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Spread the love