June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெறும் வழிமுறைகள்

இராமநாபுரம், ஜூன் 23

இராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் பயன்பாட்டினை குறைத்திட அதிகளவில் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும். அதற்கான சான்று விதைச்சான்று துறை மூலம் வழங்கப்படுகிறது. அங்கக முறைப்படி இயற்கை வழி மேலாண்மை முறையில் சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும். இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் இரசாயன நேர்த்தி செய்த விதைகள் எக்காரணம் கொண்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது. அங்கக வேளாண்மை சாகுபடி செய்யும் பண்ணை தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களினாலோ அல்லது இதர சூழ்நிலைகளின் மூலமாகவோஅங்ககப் பண்ணை மாசுபடுவது தடுக்கப்படுகிறது.

அங்ககச்சான்றளிப்பிற்கு மாறுதல் காலம் கடைப்பிடிக்க வேண்டும். இந்தகால அளவு சுற்றுச் சுழலையும் முந்தைய நிலப்பயன்பாட்டையும் பொறுத்து அமையும். சான்று செய்யப்பட உள்ள பயிர் விதைப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தேசிய அங்கக உற்பத்தி தரங்கள் அனைத்தும் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். பல்லாண்டு பயிர்களுக்கு முதல் அறுவடை தொடங்க குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து தேசிய அங்கக தரங்கள் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே அங்கக முறையில் தொடர்ந்து சாகுபடி செய்பவர்களாக இருந்தாலும் குறைந்தது 12 மாதங்கள் காத்திருக்கும் காலத்திற்கு பிறகு தான் சான்று வழங்க ஏதுவாகும். ஆனால் தொடர்ந்து அங்கக சாகுபடி செய்தமைக்கு உரிய பதிவு ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும். அங்கக வேளாண்மை சாகுபடியின் போது பயறு வகை பயிர்கள் சாகுபடி வருடாந்திர பயிர் சுழற்சியில் இருக்கவேண்டும். இதனால் மண்வளம் பாதுகாக்க வழிவகுக்கிறது.

இயற்கை வரம் தாவர பூச்சிக்கொல்லிகள் பண்ணைக்கு வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தப்படும் பட்சத்தில் அது இராசயன உரம் பூச்சிக்கொல்லி மற்றும் வேறு மாசுபடுத்தும் பொருட்கள் இல்லாதது என்பதை எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும். நன்கு மக்கிய பின்னரே இயற்கை உரங்களை இட வேண்டும். அங்ககச்சான்றுக்கு விண்ணப்பிக்கும் பண்ணையில் பதிவு ஆவணங்கள் பராமரிக்கவேண்டும். பண்ணைக்கு உள்ளே வரும் இடுபொருட்கள் பற்றியும் தினசரி பணிகள், ஆண்டு பயிர் திட்டம். பரிசோதனைகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்து ஆவணங்கள் பராமரிக்கப்படவேண்டும். அவைகள் ஆய்வின் போது காண்பிக்கப்பட வேண்டும்.

மண் அரிமானத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுநீர் ஓடைகள் அதிக உரம், பூச்சி மருந்து பயன்படுத்தும் பண்ணைகள் அருகில் அங்ககசான்றுப் பண்ணைகள் இருக்கக்கூடாது. கால்நடைகள் பண்ணையிலேயே பராமரிக்கப்பட வேண்டும். கால்நடைகளுக்கு தீவனமாக தினமும் கூடியவரையில் பண்ணையில் விளைந்தவற்றினையே பயன்படுத்த வேண்டும். வெளியில் இருந்து தீவனம் பெறப்படின் மாசு இல்லாத இடங்களில் விளைந்ததாக இருத்தல் வேண்டும். அங்கக வேளாண்மைக்கு பயன்படுத்தும் பண்ணைக் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள், டிராக்டர், லாரி இவைகளின் மூலம் அங்கக விளைபொருட்கள் மாசுபடாதவாறு அவ்வப்போது சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும். அங்கக விளைபொருட்கள் சேமிக்கும் இடங்கள் தனியாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்.

அங்ககச் சான்று பெறுவதற்கு விவசாயிகள் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பண்ணையின் பொது விபர குறிப்பு, பண்ணையின் வரைபடம், ஆண்டு பயிர்த் திட்டம், மண் மற்றும் பாசன நீர்பரிசோதனை விபரம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம், நிரந்தர கணக்கு எண், ஆதார் அட்டை நகல் மற்றும் விண்ணணப்பதாரரின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சான்று கட்டணத்தை செலுத்த வேண்டும். சான்று கட்டணமாக தனி நபர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2700, இதர விவசாயிகள் ரூ.3200, விவசாயிகள் குழுவாக இணைந்து பதிவு செய்ய ரூ.7200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் இராமநாதபுரம் மருத்துவமனை எதிரில் உள்ள வேளாண் விற்பனை குழு அலுவலக வளாகத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன் பெறுமாறு இராமநாதபுரம் விதைச்சான்று உதவி இயக்குநர் (பொ) மதுரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love