சிவகங்கை, மே 20
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா) கீழ் அங்கக வேளாண்மை மற்றும் அங்கக சான்றளிப்பு குறித்து உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி காளையார்கோவில் வட்டாரத்தை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு 19.5.22 அன்று மதுரைச்சாமி, விதைச்சான்று உதவி இயக்குநர் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கருமந்தக்குடி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் விதைச்சான்று உதவி இயக்குநர் பேசுகையில், விவசாயிகளுக்கு விவசாயத்துக்கு அடிப்படை தேவை அல்லது மூலத் தேவை தரமான விதைகளே, அதிக விளைச்சலுக்கு தரமான விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன். தரமான விதைகளை பயன்படுத்துவதால் மகசூலை 15 சதவீதம் அதிகப்படுத்தலாம். எனவே ஒவ்வொரு விவசாயும் விதைகளின் உற்பத்தி நிலைகள் பற்றியும், தரமான விதைகளின் முக்கியத்துவம் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்:
சான்றளிப்புக்கான பொதுவான வழிமுறைகள், விண்ணப்பபடிவம் மதிப்பீடு செய்தல் ஆய்வுக்கான நேரத்தை அட்டவணையிடுதல் ஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல் மற்றும் அங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள் குறித்து அங்கக சான்றளிப்பு குறித்து விரிவான முறையில் எடுத்துரைத்தார் . மேலும் அங்கக வேளாண்மையின் முறைகளான பண்டைய மேலாண்மை முறைகளிலிருந்து அங்கக மேலாண்மை முறையாக மாற்றுதல் மாற்று மூல காரணங்களான பயிற்சுழற்சி பயிர் கழிவு மேலாண்மை அங்கக எருவு உயிரியல் உள்ளீடுகள் ஆகியவற்றை கொண்டு பயிர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் கால்நடைகளை அங்கக முறைப்படி பராமரித்து அவற்றையும் வேளாண்மையின் ஓர் அங்கமாக ஆக்குதல் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வம் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை (முஊஊ) குறித்து விவசாயிகளுக்கு அதை வாங்குவது எப்படி அதன் பயன்கள் என்ன, மேலும் என்னென்ன ஆவணங்கள் தேவை போன்ற விவரங்களை விரிவான முறையில் எடுத்துரைத்தார். மேலும் தென்னைக்கு என நுண்ணூட்டச்சத்து கலவையை தமிழ்நாடு வேளண்மைத் துறையினரால் தயாரித்து அளிக்கப்படுகிறது, நுண்ணூட்ட சத்து கலவை மற்றும் உயிர் உரங்களை தேவையான அளவு தொழுஉரத்துடன் கலந்து தனியே இடலாம். எக்காரணத்தை கொண்டும் ரசாயன உரங்களுடன் நுண்ணூட்ட சத்து கலவையை கலக்க கூடாது என்று தென்னையில் அதிக மகசூல் உர மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.