August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை வேளாண்மைக்கு உதவுமே பல வகை இடுபொருட்கள்

இன்று பல பகுதிகளில் இயற்கை வேளாண்மை உத்திகள் கடைபிடிக்கப்பட்டு பலன் தந்து வருகிறது. இருப்பினும் இயற்கை வேளாண்மை என்றால் வெறும் இயற்கை உரம் போடுவது தான், நாட்டு மாடு வளர்ப்பது தான், தென்னந்தோப்பில் வெறும் தென்னை மர மட்டைகளை வெட்டி மூடாக்கு போட்டால் போதும் என்று சிலரால் தவறான கருத்துக்கள் பரப்பி விடப்பட்டுள்ளது. ஆம் செய்ய வேண்டியதை செய்யாமல் விடுவதும் அறியாமை நன்கு அறிய ஆர்வமின்றி பிறர் பேச்சைக் கேட்பதும் அறியாமையின் வெளிப்பாடே. நம் நாடு விடுதலை ஆண்டு முதலே நிபுணர்களால் ஒருங்கிணைந்த மண்வளம் மற்றும் நீர் மேலாண்மையை விரிவாக விளக்கப்பட்டு தான் வருகிறது. இதற்கு ஏராளமான பல் வகை பயிர்களுக்கும் பயிற்சி நிலையங்களும் உள்ளனவே..

குறிப்பாக எல்லா பயிர்களுக்கும் இடவேண்டிய இயற்கை வேளாண் இடுபொருட்கள் பல உள்ளன. மேலும், நல்ல உத்திகளும் நிறைய உள்ளன. குறிப்பாக தொழு உரம், பசுந்தாள் உரம், தழை உரம், பயிர் கழிவு பயன்பாடு, உயிர் உர உபயோகம் பல பயிர் சாகுபடி, வேலிப்பயிர், வளர்ப்பு முதலியன வரப்புப்பயிர் சாகுபடி கலவை உரக்குழி அமைத்தல், மண்புழு உரம் தயாரித்து இடுதல் முதலியன பல ஆண்டுகளாகப் பரிந்துரைகளாகவே உள்ளன. எந்தப் பயிருக்கும் இவை மிக மிகத் தேவையானவையே. இடுபொருள்கள் கிடைக்காதபோது முன்பெல்லாம் வெளியில் இருந்து கொண்டு வந்தாவது போடலாமென்ற அறிவுரைகள் தரப்பட்டன. ஆனால், இயற்கை வேளாண்மையில் அங்கேயே தயாரித்தும், அங்கே கிடைப்பதை இடுவதும் தான் நல்லது என வலியுறுத்தப்படுகிறது. அப்படி முடியாத சிலவற்றை பட்டியலிட்டு அவற்றை இடுபொருளாக பயன்படுத்த அனுமதி உள்ளது.

ஆனால், இன்று நவீன யுகத்தில் எதற்கும் சாத்தியம் என்று கூறுமளவிற்கு வாய்ப்புள்ளது. எந்தத் தோட்டத்திலும் அந்த மண்ணுக்குத் தேவையான இடுபொருள்களை அங்கேயே தயாரித்தும் இடலாம் என்ற நிலை உள்ளது. அப்படி பயன்படுத்தும்போது செலவே இல்லாததும் கண்கூடு. எனவே, தான் இது உன்னத உத்தியாக நீடித்த மற்றும் நிலைத்த வேளாண்மைக்கு வழிகோலும் உத்தியாக உள்ளது. உற்பத்தி மட்டுமல்ல, நம் நோக்கம் மண்வளமும் பேணப்பட வேண்டும். நீர் ஆதாரமும் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தான் இன்றைய தேவை மேலும், பலவகை உயிர் குளங்கள் வாழ இவ்வழி உதவிகரமாக உள்ளதே என்று சுட்டிக்காட்டும் பல்லுயிர் காக்கும் உன்னத சாகுபடி முறையாக இன்று இயற்கை வேளாண்மை உள்ளது.

பஞ்ச பூதங்களின் தன்மையை அறிந்து கொண்டு முறையான பயன்பாட்டை அதிகரித்து பருவத்தே பல உத்திகளை கையாள வேண்டும். ஒவ்வொரு சதுர சென்டி மீட்டரிலும் கிடைக்கும் மழை, சூரயி ஒளி, இவற்றை பாழாக்காமல் பயன்படுத்துவதும் அவசியம். தரை முதல் வானம் வரை பலவித அடுக்குகளாக பயிர்கள் வளர்த்திடவும் வேண்டும். அத்துடன் கால்நடை தேனீ, காளான் முதலிய இதர உபதொழில்கள் செழித்திடவும் வழி உள்ளதே. இத்தகைய நன்மைகள் பலவற்றை கண்முன்னே காட்டும் இயற்கை வேளாண்மையை செய்வதா வேண்டாமா? என்ற சந்தேகத்துக்கே இனி இடமில்லை ஆம். இன்று அதனை செய்தால் தான் நோயற்ற வாழ்வு நமக்குண்டு நமது சுகாதாரமும் பேணப்படும். எனவே, அறிந்து செய்வோம் இயற்கை வேளாண்மையை
மேலும் விபரம் பெற அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : டாக்டர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம்

Spread the love