October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை வேளாண்மையில் அங்ககச் சான்று பெறும் நடைமுறைகள்

இராமநாதபுரம், அக்.6

அங்கக வேளாண்மை என்பது காலங்காலமாக விவசாயிகள் மேற்கொண்டு வரும் பாரம்பரிய விவசாயமாகும். முக்கியமாக செயற்கையான இரசாயன ஊட்ட முறைகள் பயிர் பாதுகாப்பு முறைகள் இவற்றை தவிர்த்து இயற்கையில் கிடைக்கக் கூடிய தொழு உரங்கள், உயிர் உரங்கள், மண்புழு உரங்கள் மற்றும் உயிர் கட்டுப்பாட்டு காரணிகளைக் கொண்டு மேற்கொள்ளும் பயிர் பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை கொண்டு நஞ்சில்லா விவசாயம் செய்வதே அங்கக வேளாண்மையின் நோக்கமாகும்.

இயற்கை வேளாண்மையில் செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தவிர்த்து தனிமைப்படுத்தப்பட்ட பண்ணைகளிலிருந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி இயற்கை வழி மேலாண்மை முறையில் சாகுபடி செய்யும் முறையே அங்கக வேளாண்மை எனப்படுகிறது. இவ்வாறு அங்கக முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் இதர பயிர்களின் விளைபொருட்களை விவசாயிகள் தனித்துவத்துடன் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டில் அங்கக சான்றளிப்புத்துறை கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

தேவையான ஆவணங்கள்
தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறை மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படி, வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (ஹஞநுனுஹ) வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இயற்கை வழி மேலாண்மை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அங்கக விளை பொருட்களை பதப்படுத்துவோர் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். அங்ககச் சான்று பெற விவசாயிகள் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பண்ணையின் பொது விபர குறிப்பு, பண்ணையின் வரைபடம், ஆண்டு பயிர்த்திட்டம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விபரம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம், நிரந்தர கணக்கு எண், ஆதார் அட்டை நகல் மற்றும் விண்ணப்பதாரரின் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சான்று கட்டணத்தை செலுத்த வேண்டும். விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வனப்பொருள் சேகரிப்பு செய்வோரும் வணிகம் மற்றும் எற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். பதிவு கட்டணம், ஆய்வு சார்ந்த கட்டணம், பயண நேரம் கட்டணம் மற்றும் சான்று கட்டணமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2700/-, பிற விவசாயிகள் ரூ.3200/-, விவசாயிகள் குழுப்பதிவிற்கு ரூ.7200/- மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், இயற்கை வேளாண்மையில் அங்கக சான்று பெறும் நடை முறைகள் குறித்து உழவர் மையம், ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகம் (தலைமை அரசு மருத்துவமனை எதிரில்) இராமநாதபுரம் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட விதைச்சான்று (ம) அங்ககச் சான்று உதவி இயக்குநர், சீ.சக்திகணேஷ் தெரிவித்தார்.

Spread the love