August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை வேளாண்மையில் நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள்

தஞ்சாவூர், ஜூலை 20

இயற்கை வழி வேளாண்மையில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பரூக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாட்டில் நெல் பயிரானது மிகவும் முக்கியமான உணவுப் பயிராக இருந்து வருகிறது. விவசாயிகள் அதிகளவில் மகசூல் கிடைக்க வேண்டி, அதிக அளவில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக மண்வளம் மற்றும் மகசூல் குறைதல், பூச்சிக் கொல்லி மருந்துக்கு எதிர்ப்புத் தன்மை, நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் சுற்றுப்புறசூழல் மாசுபடுதல் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது, அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை வேளாண்மை ஒரு சிறந்த வழிமுறையாக உள்ளது.

இயற்கை சாகுபடி என்பது சாகுபடி செய்யும்பொழுது இயற்கை வளங்களை அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல், இயற்கை சார்ந்த உரங்கள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதால் பெருநகரங்களில் இயற்கை வேளாண்மை விளை பொருட்களுக்கான தனியாக கடைகள் செயல்பட்டு வருவதோடு, கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்.

எனவே இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமல்லாமல், நமது மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.

இயற்கை வேளாண்மையில் நல்ல தரமான மற்றும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள பாரம்பரிய ரகங்களை உபயோகப்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதோடு கூடுதல் விலையும் பெற முடியும். இயற்கை சாகுபடி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகிக்க வேண்டும். விதை நேர்த்தி செய்வதற்கு ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து உயிர் உரங்கள் மற்றும் தாவரம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் 10 கிராம் பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் இளம் பயிரில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.

நடவு வயலில் கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இட வேண்டும். அல்லது நடவு வயலில் நடுவதற்கு முன்பு பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை, கொழுஞ்சி விதைகளை 20 கிலோ விதைத்து பிறகு 45 நாட்கள் கழித்து பூக்கும் தருணத்திற்கு முன்பு மடக்கி உழுதல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது சுமார் 10 டன்கள் வரை பசுந்தாள் உரம் கிடைப்பதோடு 50 கிலோ தழைச் சத்தும் மண்ணுக்கு கிடைக்கிறது.

வேம்பு, புங்கம், கிளைரிசிடியா மற்றும் சுபாபுல் மரத்தின் கிளைகளை ஒடித்து சரியான ஈரப்பதத்தில் நிலத்தில் நன்கு மக்கும்படி கலந்து மடக்கி உழவேண்டும். பசுந்தாள் உரப் பயிர்களை வளர்க்க முடியாவிட்டால் ஒரு ஏக்கருக்கு 5 டன் மண் புழு உரம் அல்லது தொழு உரம் போடலாம். சூடோமோனாஸ் உயிர் பூஞ்சானக் கொல்லியை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவு வயலில் நடவு நடுவதற்கு முன்பாக இட வேண்டும்.

நடவு வயலில் அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட் மற்றும் பாக்டீரியா 10 பாக்கெட் ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

அசோலா உயிர் உரத்தினை ஒரு ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் நடவு செய்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் விட்டு, நன்கு வளர்ந்த பின் கோனோவீடர் மூலம் நன்கு அமுக்கப்படுவதால் வயலுக்கு உரமாக கிடைக்கிறது. கோனோ கருவிகள் மற்றும் ரோட்டரி கருவிகளை கொண்டு பதினைந்து நாட்கள் முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு மண் காற்றோட்டம் அடைவதுடன் வேரின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது.

மேலும் நடவு வயலில் மேலுரமாக ஒரு ஏக்கருக்கு வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ தருணத்தில் இட வேண்டும்.

மேற்கூறிய அனைத்து எளிய இயற்கை தொழில்நுட்பங்களை மேற்கொண்டு, விவசாயிகள் பயனடைய கேட்டுக் கொண்டார்.

Spread the love