August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை வேளாண்மையில் பயிர் பாதுகாப்பு முறைகள்

தஞ்சாவூர், ஆக. 3

இயற்கை வழி பயிர் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஒரு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது. இருந்த போதிலும் ரசாயன பூச்சிக்கொல்லி அல்லாத ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகளை ஆரம்பத்தில் இருந்து முறையாக கடைப்பிடிப்பதால் பூச்சி மற்றும் நோய்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

இயற்கை வேளாண்மையில் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பரூக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின் வருமாறு,

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்

  1. ஆமணக்கு வெளியடுக்கு :

ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம். எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியை தான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம். எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமை செய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது.

  1. தட்டைபயறு பயிரிடுதல் :
    தட்டைச் செடிகளை வரப்போரங்களில் அல்லது ஊடுபயிராக நடலாம். இவை அசுவினிப் பூச்சிகள் வளர்வதற்கு ஏற்ற செடியாகும். அசுவினிப்பூச்சிகள் ஒரளவு வந்தவுடன் அசுவினியை உண்ண பொறிவண்டுகள் மற்றும் பல நன்மை செய்யும் பூச்சிகள் வருகின்றன.
  2. மக்காச்சோளம் பயிரிடுதல் :
    மக்காச்சோளத்தில் இறைவிழுங்கிகள் அதிகம் தங்கியிருக்கும். இதை வரப்பைச் சுற்றியோ அல்லது ஊடுபயிராகவோ பயிர் செய்யும்போது நிறைய இறை விழுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பயிரைத்தாக்கும் பூச்சிகளை அழிக்கிறது.
    மேலும், மக்காச்சோளம் பறவைகள் உட்காருவதற்கு உதவியாக இருக்கும். பூச்சிவிழுங்கிப் பறவைகள் இதில் அமர்ந்து பயிரைத்தாக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.
  3. மஞ்சள் வண்ணப்பூச்செடிகள்
    செண்டு மல்லி எனப்படும் துலுக்க சாமந்தியின் வேர்களில் இருந்து சுரக்கும் திரவங்கள் நூற்புழுக்களைக் கொல்லக்கூடியவை. இந்த திரவங்கள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு செல்லக்கூடியவை. எனவே பயிர்களுக்கு அருகிலேயே துலுக்க சாமந்தியை நடவேண்டும்.
  4. வேப்பங்கொட்டைக் கரைசல் :

பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் வேம்பில் 18 வகையான ஆல்கலாய்டு உள்ளது. இதில் முக்கியமானது அஸாடிராக்டின் என்ற ஆல்கால்ய்டு. இதனால் வேப்பங்கொட்டையில் எடுக்கப்படும் வேப்பெண்ணை சிறந்த இயற்கை முறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. இயற்கை வேளாண்மையில் நெல் சாகுபடி செய்யும் பொழுது ஆரம்ப கால சமயங்களில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு மகசூல் அதிகரிக்க வாய்ப்பு வாய்ப்புள்ளது. மேலும் உற்பத்தி செலவு குறைந்து நிகர லாபம் அதிகரித்து சுற்றுப்புறச் சூழல் மாசு படாதவாறு பாதுகாக்கப்படுகிறது எனக்கூறினார்.

Spread the love