May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை வேளாண் சான்றிதழ்கள் நடைமுறை
பிரச்சனைகளும் தீர்வுகளும்

கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் குறைந்த செலவில் அதிக லாபம் மற்றும் இயற்கை சீற்றங்கள், பருவ மாற்றுப் பிரச்சனைகளை தாங்கி வளரும் இயற்கை முறையிலான பயிர் சாகுபடி விவசாயிகளிடம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக உள்நாட்டிலும், பல வெளிநாட்டு வேளாண் சந்தைகளில் அதிகளவு விற்பனை வாய்ப்புகள் உள்ள இயற்கை வேளாண் பொருட்களுக்கு உரிய இயற்கை வேளாண் சான்றிதழ்கள் (Orgranic Farm certification) வழங்கும் நடைமுறையில் பல நடைமுறை பிரச்சனைகள் உண்மையான இயற்கை வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்பவர்கள் மற்றும் கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் மேலை நாடுகளுக்கு இயற்கை வேளாண் விளைப்பொருட்கள் என்று ஏற்றுமதி செய்யப்பட்ட வேளாண் விளைப் பொருட்கள் யாவும் செயற்கை வேதியியல் உரங்களான யூரியா போன்றவை கொண்டு சாகுபடி செய்யப்பட்டவை. மேலும் இயற்கை வேளாண்மையில் மரபணு மாற்று பொருட்கள் தடைசெய்யப்பட்ட சூழலில் மரபணு மாற்று பருத்தி விதைகளும் பயன்படுத்தப்பட்டு அதற்கும் இயற்கை வேளாண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சில இயற்கை வேளாண் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் செய்கின்ற தவறுகளால் ஒட்டு மொத்தமாக இயற்கை வேளாண் விளைப் பொருட்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையும், வணிகமும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கிறது. மேலும் பல இடங்களில் விவசாயிகளுக்கு தெரியாமல் கூட அவர்களின் விளைப்பொருட்களுக்கு “இயற்கை வேளாண் விளைப்பொருள்” என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் பரிமாற்ற சான்றிதழ் (Transaction certificate) வழங்கப்பட்ட சூழலில் விவசாயிகள் குறிப்பிடப்பட்டுள்ள பயிரை சாகுபடி செய்யவே இல்லை. அண்மையில் பங்களா தேஷ் நாட்டின் ஜவுளி கூட்டமைப்பு சார்பில் அவர்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த இயற்கை பருத்தி (Organic Cotton) சுமார் 16,100 டன்களுக்கு உரிய பரிமாற்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய தவறுகள், குறைபாடுகளை களைய இயற்கை சான்றிதழ் நிறுவனங்கள் மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தவறு செய்யும் நிறுவனங்கள் பற்றிய தகவல் போதிய அளவில் விளம்பரம் செய்யப்படாத காரணத்தால் அவற்றின் செயல்பாடுகளை பற்றி இயற்கை வேளாண் சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாய குழுக்களுக்கு தெரிவது கிடையாது. இதனால் விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுவது தொடர்கிறது. எனவே வேளாண் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும். நமது உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் உள்ள இயற்கை வேளாண் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நுகர்வோரின் நலன்களை பாதுகாக்கவும், நமது வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகளில் நமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் செய்யவும் தற்போது வேளாண் சான்றிதழ்கள் வழங்குவதில் தவறு செய்யும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மேல் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் தவறு செய்த நிறுவனங்களின் பெயர் பட்டியலை ஊடகங்கள் வாயிலாக விவசாயிகள், நுகர்வோரிடம் பரப்புரை செய்வது வேளாண் சந்தைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இயற்கை வேளாண் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு பங்குதாரர்களின் நலன்களை பாதுகாக்கவும் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரை: முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப்பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத்துறை) மற்றும் ஒருங்கிணைப்பாளர், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Spread the love