October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இராகி (கேழ்வரகு) பயிரின் சாகுபடி முறைகள்

வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

கோவை, அக்.8

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களில் இராகி முதன்மையானதாகும். இராகி மிகச்சிறந்த மானாவாரி பயிராகும். மிகக்குறைந்த நீரைக்கொண்டு சுமாரான மண் வளத்தில் பூச்சி நோய் தாக்குதல் இன்றி நிறைவான மகசூலை தரவல்லது. இறவையாக தை பட்டத்திலும், மானாவாரியாக ஆடி பட்டத்திலும் அனைத்து வகையான நிலங்களும் ராகி பயிரிடுவதற்கு ஏற்றவையே. கோ (ஆர்.ஏ) ,14,15, பையூர் 2, திருச்சி 2 போன்ற இரகங்களை கை விதைப்பு முறையில் விதைப்பதற்கு எக்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். ஆறு மணி நேரம் விதையைத் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் அல்லது பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் 3 பாக்கெட்டை ஒரு எக்டருக்கான விதையுடன் கலந்து பின் விதைக்க வேண்டும். அல்லது பூஞ்சானக்கொல்லி மருந்தான ஒரு கிலோ விதைக்கும் திரம் 4 கிராம் அல்லது கார்பென்டசிம் 2 கிராம் என்ற அளவில் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு பின் விதைக்கலாம். வரிசை விதைப்பு செய்திருந்தால் இரண்டு அல்லது மூன்று முறை இடை உழவு செய்து பின் ஒரு முறை கையினால் களை எடுக்க வேண்டும். கை விதைப்பு முறையில் விதைக்கப்பட்டிருந்தால் இடை உழவு செய்ய இயலாது.

விதையை விதைக்கும் போது 2.5 செ.மீ ஆழத்தில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். பொதுவாக ஒரு எக்டரில் 3.3 இலட்சம் செடிகள் இருந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் ராகி முளைத்து வரும் பொழுது வறட்சியைத் தாங்கி வளரும் பண்பைப் பெறுகின்றது. இரண்டு முறை கையினால் களை எடுக்க வேண்டும். உயிர் தண்ணீர் விதைப்பு பூக்கும் பருவம், பால் பருவம், பயிர் வளர்ச்சிப் பருவங்களில் அவசியமாக மண்ணில் ஈரப்பதம் தேவைப்படுகின்றது. தண்ணீர் தெளிப்பானைப் பயன்படுத்தி இந்நீர் இரண்டு முறை பயிர்களுக்கு பாய்ச்ச வேண்டும். அசுவினி, கதிர் நாவாய்ப்பூச்சி, தத்துப்பூச்சி, கதிர்நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்த தைமீத்தோயேட் 30 EC (அ) இட்டாகுளோரேபிரையிட் 30.5 %SC (அ) தியேமேன்தாக்ஸ்சம் 30% EC போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை ஒட்டும் திரவம் உடன் கலந்து தெளிக்க வேண்டும். இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான், வெட்டுப்புழு, இலை சுருட்டுப்புழு, வெள்ளை தண்டு துளைப்பான்களை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டர் இனகவர்ச்சி பொறியை 12 என்ற அளவிலும் விளக்கு பொறிகள் மூலம் தாய் அந்துப்பூச்சியை கவர்ந்து அழித்தல், வரப்பு ஓரங்களில் ஆமணக்கு செடிகளை பயிரிடுதல், பிப்ரோனில் அல்லது மொமேட்டின் பேன்சோயேன் போன்ற மருந்தினை ஒன்றை நீரில் கலந்து பயிர் முழுவதும் நனையும் படி தெளிக்க வேண்டும்.

குலை நோயை கட்டுப்படுத்த விதைப்பிற்கு 10-12 நாட்கள் பிறகு நாற்றங்காலில் கார்பன்டாசிம் 0.1% தெளிக்க வேண்டும். திரும்பவும் விதைப்பிற்கு 20-25 நாட்கள் கழித்தும், நட்டு 40 முதல் 45 நாட்களுக்கு பிறகும் தெளிக்கவேண்டும். இலைக் கருகல், தூர் அழுகல், அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்த பயிர்களில் கடுமையான தாக்குதல் இருப்பின் மேன்கோஷெப் 2 கிராம்/லிட்டர் என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும். முதல் அறுவடை பழுப்பு நிறமாக மாறிய அனைத்து கதிர்களையும் அறுவடை செய்ய வேண்டும். முதல் அறுவடைக்கு பிறகு 7ம் நாளில் அனைத்து தானிய கதிர்களையும் பச்சையாக இருக்கும் கதிரையும் சேர்த்து அறுவடைசெய்ய வேண்டும். அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கு முன் குவியலாக நிழலில் ஒரு நாள் வைப்பதன் முலம் வெப்பநிலை அதிகரித்து தானியத்தை தரமாக்க வேண்டும். உலர்ந்த தானியத்தை கதிரடித்து, புடைத்து, சுத்தம் செய்து சாக்கு பைகளில் சேமிக்க வேண்டும். மானாவாரி நிலத்தில் 7000-7500 கிலோவும் இறவை நிலத்தில் 6000- 6500 கிலோவும் தானிய மகசூல் கிடைக்கும்.

மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து இராகி பயிர்களில் அதிக மகசூல் பெறலாம் என கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் திட்ட மேளாண்மை குழு தெரிவித்துள்ளனர்.

Spread the love