ஈரோடு, ஏப்.5
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரம் கூகலூர்-அ, கூகலூர்-இ, நாகதேவன்பாளையம் ஆகிய கிராமத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் விவசாயிகளின் நிலங்களில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து மண் பரிசோதனை செய்து தந்தனர். இன்றைய கால கட்டத்தில் மண் மற்றும் நீர் பரிசோதனை விவசாயத்தில் அவசியமாகிறது. மண் பரிசோதனை செய்வதற்கு மண் மாதிரிகளை சேகரிக்கும் முறையானது, மண் மாதிரிகள் எடுக்கும் இடத்திலுள்ள சருகு, இலை, புல் போன்றவற்றை மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். “வி’ (V) வடிவத்தில் மண்வெட்டியால் குழிவெட்டி, அந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். வெட்டிய குழியிலிருந்து மண் மாதிரிகளை சேகரிக்க வேண்டும்.
இதுபோல் ஒரு வயலில் குறைந்தது 5 அல்லது 10 இடங்களில் மண்ணை சேகரித்து ஒன்றாக கலந்து, வேர், தண்டு, கல் போன்றவற்றை அப்புறப்படுத்திக் கொண்டுவர வேண்டும். மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்தி, மண்ணை நன்றாக கலந்து சுமார் அரை கிலோ அளவிலான மண்ணை பரிசோதனைக்கு கொண்டு வரவேண்டும். மண்ணின் தன்மையை அறிந்து, பயிர்களுக்கு தேவையான உரத்தை மட்டுமே பயன்படுத்தி செலவினத்தை குறைக்கலாம்,சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம். களர், உவர் மற்றும் அமில நிலங்களை கண்டறிந்து அதனை சீர் செய்யலாம் போன்ற பல தகவல்களை விவசாயிகளுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வழங்கினார்.
Spread the love