August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இளம் கோழிக்குஞ்சுகளுக்கான பராமரிப்பு முறைகள்

கோழிக்குஞ்சுகள் வளர்க்கும் கொட்டகையை கோழிக்குஞ்சுகள் வருவதற்கு 15 – 20 நாட்களுக்கு முன்பாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த கொட்டகையை சுண்ணாம்பு பூசி, குளிர் காற்று குஞ்சுகளை பாதிக்காதவாறு நான்கு பகுதியிலும் படுதா கொண்டு அடைக்க வேண்டும். தீவனத்தட்டு, தண்ணீர் தட்டு, மருந்துகள், தடுப்பூசி ஆகியவற்றினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆழ்கூழங்களில் இருக்கும் காகிதங்களை தினந்தோறும் மாற்ற வேண்டும். கோழிக்குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் 0.3 – 0.4 சதுர அடியும். 2 – 4ம் வாரத்தில் 0.8 – 1.0 சதுர அடியும், 5 – 8ம் வாரத்தில் 1.5 – 1.08 சதுர அடியும் இட வசதி செய்து தர வேன்டும். மருந்து கலந்த தண்ணீரை அடைக்காப்பானுக்குள் வைக்க வேண்டும். ஒரு தண்ணீர் தட்டு 75-100 குஞ்சுகளுக்கு என்ற விகிதத்தில் வைக்க வேண்டும். தீவனத் தட்டு 10 – 15 கோழிக்குஞ்சுகளுக்கு என்ற விகிதத்தில் வைக்க வேண்டும். தண்ணீர் எளிதில் குடிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். கோழிக்குஞ்சுகள் பண்ணைக்கு வருவதற்கு 2 -3 மணி நேரத்திற்கு முன்பே அடைகாப்பானில் மின்விளக்கை எரியவிட வேண்டும்.

கோடை காலமாக இருந்தால் 7 முதல் 10 நாட்களுக்கும், குளிர்காலமாக இருந்தால் 10 – 15 நாட்களுக்கும் வெப்பத்தினை கொடுக்க வேண்டும். கோழிக்குஞ்சுகளுக்கு வெப்பம் போதுமானதாக இல்லாத பட்சத்தில் அனைத்துக் கோழிக்குஞ்சுகளும் மின்விளக்குகள் அருகில் இருக்கும். அப்பொழுது நாம் வெப்பத்தினை அதிகரிக்க வேண்டும். கோழிக்குஞ்சுகள் அனைத்தும் அடைகாப்பானின் கடைக்கோட்டில் இருந்தால் வெப்பம் அதிகமாக இருக்கின்றது என்று அறிந்து ஒளிவிளக்கினை மேலே உயர்த்தி வெப்பத்தினை குறைக்கலாம். கோழிக்குஞ்சுகள் அனைத்தும் சரி சமமாக இருந்தால் வெப்பநிலை சூடு சரியாக இருக்கின்றது என்று அறியலாம்.

இவ்வாறாக கோழிக்குஞ்சுகளுக்கு அதிக கவனம் செலுத்தி வளர்க்கும் போது கோழிக்குஞ்சுகள் இறப்பினை குறைக்கலாம். பெரிய கோழிகளாக வளரும்போது திடகாத்திரமாகவும், அதிக முட்டையிடக்கூடியதாகவும் இருக்கும்.

தகவல் : அ.ஷீபா, தா.லூர்து ரீத்தா, ச.இளவரசன், ரா. ஜோதிபிரியா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், புதுக்கோட்டை – 622 004.

Spread the love