வரகு சாகுபடிப் பரப்பு 300 ஏக்கராக அதிகரிப்பு
ஈரோடு, ஜூன் 3
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் கடல் மட்டத்திற்கு மேல் 900 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள பர்கூர் மலைப் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “இந்த ஆண்டில் இப்பகுதியில் கோடை மழை போதிய அளவு பெய்த காரணத்தினாலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலர்கள் இப்பகுதி விவசாயிகளிடையே சிறு தானியம் குறித்தான உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதாலும், இதுவரை இல்லாத நிலையில் வரகு பயிர் 300 ஏக்கரிலும், பயறு வகைகளான உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு, 1800 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேவர் மலை, மடம், கடையீரட்டி, வெள்ளிமலை, பெஜலிட்டி, ஈரட்டி, எலச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நல்ல நிலையில் உள்ளன.
மேலும் இப்பகுதி விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் 50 சத மானியத்தில் 1000 கிலோ வம்பன் 8 என்ற உயர் விளைச்சல் உளுந்து ரகமும், 500 கிலோ பாசிப்பயறு வம்பன்-6 என்ற ரகமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களுக்கென்றே உண்டான சிறப்பம்சமான வேர் முடிச்சுக்கள் உருவாவது இங்கு சாகுபடி செய்யப்பட்ட பயறு வகை பயிரில் அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் பயிரின் வளர்ச்சி நல்ல நிலையில் இருப்பதும், அதிகமான பூக்கள் எடுப்பதும் பின்னர் அதிகபட்ச மகசூல் கிடைப்பதும் எளிதாகிறது. பயறுவகைப் பயிர்களில் ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்பகுதியில் சாகுபடி முறையானது முற்றிலும் இயற்கை சார்ந்ததாக இருப்பதால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும் தரமான விளைபொருள் கிடைக்கவும் வாய்ப்பாகிறது என்றார்.”
எதிர்காலத்தில் இப்பகுதியில் விவசாயிகளின் தேவைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தாமரைக்கரையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் அவர் ஆய்வு செய்தார்.